Friday, September 18, 2015

ஆசிரியரின் அதிகாரம் இற்று விழும் வகுப்பறைகள்

1978ஆம் ஆண்டு முதல், தொடர் முயற்சிகளை மேற்கொண்டு, 1979ஆம் ஆண்டில் அம்மனிதரை இந்தியாவுக்கு அழைத்துவந்தனர். டில்லியில் அவர் தங்கியிருந்த ஒரு வார காலமும், தனிச்சிறப்பு மிக்க கருத்தாளர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சிகள், அரசாங்கம், பிற செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் தங்களுக்கென தனிச் சொற்பொழிவுகளை நிகழ்த்த வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். எல்லாவற்றையும் அன்போடு நிராகரித்த அவர், குழு விவாதங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்வதே தனக்கு மகிழ்வூட்டும் செயல் என்று கூறி, அவற்றில் மட்டுமே பங்கெடுத்தார். அவர்தான்அர்த்தமுள்ள மனிதப் பேச்சு உலகை மாற்றும்என்ற முழக்கத்தை முன்வைத்த பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரையரே.

தற்போதைய கல்வி முறையைவங்கிக் கல்வி முறைஎன்று பெயரிட்டவர் அவர்தான். வங்கியில் எவ்வளவு பணத்தைப் போடுகிறோமோ அவ்வளவு பணத்தை எடுக்கலாம். அதுபோல், மாணவர்களை எவவளவு மனப்பாடம் செய்ய வைக்க முடிகிறதோ, அவ்வளவு மதிப்பெண்கள் வாங்க வைக்க முடியும். ஆசிரியர் எவ்வளவு படித்துக் கொண்டு செல்கிறாரோ அவ்வளவே நடத்த முடியும். பாடத்தை மாணவர் மண்டையில் புகுத்தும் முயற்சியே வகுப்பறையின் பிரதான செயல்பாடு. இந்த செயல்பாடு செவ்வனே நடைபெற வேண்டுமானால், வகுப்பறையில் அமைதி நிலவ வேண்டும். காலையில் பள்ளி தொடங்கும்போது தொடங்கும் அமைதி, மயான அமைதியாய் இறுதிப் பாடவேளை வரை தொடர்கிறது. இந்த மௌனமே வகுப்பறையின் கலாச்சாரமாக மாறிவிட்டது. மௌனம் கற்றலின் எதிரி. மௌனக் கலாச்சாரம் உடைபடும் புள்ளி, கற்றலின் தொடக்கம் ஆகும்.

வங்கி முறைக் கல்வி தொடரும் வரை மௌனக் கலாச்சாரம் உடைபடுதல் சாத்தியல் இல்லை என்றார் பிரையரே. அர்த்தமுள்ள, அறிவுப்பூர்வமான உரையாடல் வழியாக மேலெழும் கல்வி செயல்பாடுதான் உண்மையான கற்றல். இது, வங்கி முறைக் கல்வி மாறி, பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறையாக உருப்பெரும் போது சாத்தியம் என்றார்.

நமது வகுப்பறைகள், வங்கி முறைக் கல்வியின் கீழ் எப்படிச் செயல்படுகிறது என்பதை பாவ்லோ பிரையரே மொழியில் கேளுங்கள்
1. ஆசிரியர் பேசிக் கொண்டேயிருப்பார். மாணவர்கள் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
2. ஆசிரியருக்கு எல்லாம் தெரியும்; மாணவனுக்கு ஒன்றுமே தெரியாது
3. ஆசிரியர் சிந்திப்பவர்; மாணவர் சிந்திக்க வைக்கப்படுபவர்
4. மாணவன் எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிப்பார்.
5. ஆசிரியர் தகவல் களஞ்சியம். அதைத் தவணை முறையில் பெற கடமைப்பட்டவர் மாணவர்.
6. மாணவனின் படைப்பாற்றல் திறனுக்கும், கேள்வி கேட்கும் மனப்பாங்கிற்கும் வகுப்பறையில் இடம் இல்லை
7. உரையாடலுக்கு இடம் கொடாது. இதனால் வகுப்பறையில் மௌனம் நீக்கமற நிறைந்திருக்கும்.
இதனை மாற்றியமைக்க கடுமையாக உழைத்தார். பல கள ஆய்வுகளை மேற்கொண்டார். கற்றறியாத விவசாயிகளிடமும் விவாதங்களை நடத்தினார். சிந்திக்கத் தூண்டும், படைப்பாற்றல் மிக்க கல்வி முறை ஒன்றை முன்மொழிந்தார். இதற்கு பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறை எனப் பெயரிட்டார்.

இக்கல்வித் திட்டத்தில்
(1) ஆசிரியர் பாடம் நடத்துபவரகவும், மாணவர் அதைக் கேட்பவராக மட்டுமே இருக்க முடியாது. மாறாக இருவரும் இணைந்து தீர்வினை தேடுவர்.
(2) வகுப்பறையில் எடுத்துக் கூறல் என்பதற்கு பதிலாக உரையாடல் நிகழும்.
(3) ஆசிரியர் என்பவர் ஆசிரிய-மாணவராகவும், மாணவர் எனப்படுபவர் மாணவ-ஆசிரியராகவும் இருப்பர்.
(4) இந்த வகுப்பறைகளில், ஆசிரியர் என்னும் அதிகாரம் இற்று விழும்.
(5) கற்பித்தலும் கற்றலும் வேறு வேறு செயல்பாடாக இருக்காது.
(6) இத்தகைய வகுப்பறைகளில் மௌனக் கலாச்சாரம் இயல்பாய் உடைபடும். அச்சூழலில், வகுப்பறை சுதந்திரக் காற்றினை சுவாசிக்கும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையேயுள்ள அந்நியத் தன்மை விலகும். பயம் நீங்கும். கற்றல் இயல்பாய் நடைபெறும் என்று கண்டுபிடித்தவர் பாவ்லோ பிரையரே.

இத்தகைய சூழல் நமது வகுப்பறைகளுக்கு எப்போது வாய்க்கும் எனக் கவலை கொள்ளத் தேவையில்லை. இவரது பாணியில் முயற்சிக்கப்பட்டவையே அறிவொளி வகுப்புகள். எழுத்தறிவு அற்றவர்களுக்கு நடத்தப்பட்ட வகுப்புகளின் எழுச்சியை இன்றுவரை நமது பள்ளிக் குழந்தைகள் அனுபவிக்க முடியவில்லை. பிரையரேவின் முயற்சிகளைத் தொடர்ந்து அவரது முழுக் கல்வி முறையையும் உள்வாங்காமல், உரையாடல் வழிக் கல்வி என்ற பகுதியை மட்டும் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில், பிரையரே காலத்திலேயே முன்னெடுத்தனர். இதனை அர்த்தமுள்ள மனிதப் பேச்சு அல்ல என மறுத்தார் பிரையரே.

பாவ்லோ பிரையரேவின் ஆய்வுகள் நுட்பமானவை. அறிதல் என்பதே ஒரு அரசியல் செயல்பாடு என்பதை முதன் முதலில் உணர்த்தியவர் அவர். கற்றல் என்பதும் ஓர் அறிதல். எனவே, கல்வியும் இயல்பாகவே ஓர் அரசியல் செயல்பாடு ஆகிவிடுகிறது. ஆசிரியர் நடுநிலையோடு இருக்க முடியாது என்றார். இவருக்கு முந்தைய கல்வியாளர்கள் எவரும் முடிவுக்கு வரமுடியாத முடிவுகள் இவை.

பிரையரே இந்தியாவுக்கு வந்திருந்தபோது, ஆசிரியர்கள் ஓர் அரசியல் செயல்பாட்டாளன் எப்படிக் கூறுகிறீர்களென என்று ஓர் பத்திரிகையாளர் கேட்டார். அதற்கு அவர்ஒரு தொடக்கக் பள்ளி ஆசிரியர், கணக்குப் பாடம் நடத்துவதாக வைத்துக் கொள்வோம். உன் கையில் நூறு ரூபாய் உள்ளது. இதனை வங்கி ஒன்றில் மூன்று விழுக்காடு வட்டிக்கு வைப்பு நிதியாக செமித்து வைத்தால் ஆறு மாதத்தில் என்ன வட்டி கிடைக்கும்என்று கேட்டதாக கொள்வோம். இதனை ஒரு கணக்கு பிரச்சனையாகவே பார்க்கிறார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு தத்துவார்த்த கேள்வி அல்லது அரசியல் கேள்வி. ஒரு முதலாளித்துவ, பிரச்சனையை, கேள்வியின் ஊடாக குழந்தையின் அடிமனதில் ஆழப் பதியவைக்கும் செயல். முதலாளித்துவ விழுமியத்தை குழந்தைக்கு அறிமுகம் செய்யும் செயல். இந்தக் கேள்வியில் நடுநிலைத் தன்மை எங்கே இருக்கிறதுஎன்று திருப்பிக் கேட்டார்.

பாவ்லோ பிரையரேவின் விமர்சன விழிப்புணர்வுக் கல்விக் கோட்பாடுகளைக் தொடக்கத்தில் கண்டு அஞ்சிய பிரேசில் நாட்டு அரசாங்கம் அவரைத் அளவில் 170 மீட்டர் நீளமும், 60 செண்டிமீட்டர் அகலமும் கொண்ட பெட்டி போன்ற தனிமைச் சிறையில் அடைத்தது. நாடும் கடத்தியது. அந்நாட்டு கரும்பு விவசாயிகள் மத்தியில் நடத்திய ஆய்வுகளில் வெற்றி கண்டு, எதிர்ப்பலைகள் ஓய்ந்து, தம் நாட்டில் எழுத்தறிவு இயக்கத்தை விமர்சன விழிப்புணர்வு அடிப்படையில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார். உலக நாடுகள் பலவும் எழுத்தறிவு முயற்சிகளை தொடங்கியது பாவ்லோ பிரையரே கண்ட வெற்றிகளுக்குப் பிறகே. எனவே இவரது கல்வி முறையே வயதுவந்தோருக்கானது என்று வாதிடுவோரும் உண்டு.

மாற்றுக் கல்வியை முன்வைத்த பிரையரேவின்ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி முறைநூல் உலகப் புகழ் பெற்றது. மாற்றுக் கல்விக்கான வேதநூல் என்று கொண்டப்படும் புத்தகம் அது. இது தவிர, ”ஆசிரியர்கள் கலாச்சார செயல்பாட்டாளர்கள் என்ற நூல் உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். தனது வாழ்வின் பிற்பகுதியில் எழுதிய நூல்கள் அனைத்தையும் பேசும் புத்தகங்களாவே இரண்டு அல்லது மூன்று கல்வியாளர்கள் கல்வி குறித்து உரையாடுவது போல் அந்தப் புத்தகங்கள் அமைந்திருக்கும். தனது வழ்க்கை வரலாற்றை எழுதும்படி நண்பர்கள் வற்புறுத்த, அதையும்லெட்டர்ஸ் டூ கிறிஸ்டினாஎன்ற தலைப்பில் அவரது உறவினர் ஒருவருக்கு எழுதும் 16 கடிதங்களாக எழுதினார்.


பால்வோ பிரையரே உருவாக்கி மாற்றுக் கல்வி முறை லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் சமூக மாற்றத்திற்கும் வித்திட்டிருக்கிறது என்றார்கள் ஆய்வாளர்கள்

இன்று அவருடைய பிறந்த நாள்.

1 comments:

தேனி சுந்தர் said...

அருமையாக உள்ளது தோழர்..

Post a Comment