Wednesday, June 18, 2014

உண்மையைக் கண்டறிதலின் புனைவு : மோடியும் கோத்ராவும்

0 comments
ஆங்கிலேயர்கள் வெள்ளை ஆதிக்கத்தை நீடித்துக் கொள்ள மதப்பாகுபாட்டையும், துவேசத்தையும் பயன்படுத்தினர். இக்கொடிய யுக்தி, இன்று மக்களின் வாக்குகளை எளிய முறையில் கவரவும், ஆட்சியைப் பிடிக்கவும், தக்கவைத்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக, பல்வேறு வடிவங்களில் மிதமாகவும், தீவிரமாகவும் மதவாத நெருப்பு பரப்பப்பட்டுக் கொண்டே இருக்கிறதுஇதனால், மதவாதம் என்னும் பெரு நெருப்பு அப்பாவி மக்களின் மனங்களில் பற்றி எரிந்து கொண்டிருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். சந்தர்ப்ப சூழல் வாய்க்கும்போது, ஊதிப் பற்றவைத்து விடுகின்றனர். அவை மதக்கலவரங்களாக கொழுந்துவிட்டு சிலநேரம் எரிகிறது, கலவரங்களில் மக்களும், சொத்துக்களும் எரிந்து தணிந்த பின், அந்த எரிநெருப்பு சாம்பலில் இருந்து வாக்குகள் துளிர்க்கின்றன. சில நேரங்களில் ஒரு சாம்ராஜ்ஜியத்திற்கு அஸ்திவார கற்களாகவும் ஆகின்றன. மதக்கலவரங்கள் யதேச்சையாக ஏற்படுவது போல் தோற்றமளித்தாலும், இந்தப் பார்முலாக்கள் நன்கு தெரிந்தவர்களாலேயே திட்டமிட்டு உருவாக்கப்படுகிறதோ என்ற ஐயம் எல்லோர் மனங்களிலும் இருந்துகொண்டே இருக்கிறது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் மதக்கலவரங்கள் பற்றி எரிந்திருந்தாலும் இரு முக்கியக் கலவரங்கள் மிக மிக கடுமையானவை. மிகப் பெரும் விளைவுகளுக்கு வித்திட்டவை. ஒன்று, 1984 ஆம் ஆண்டு இந்திராகாந்தி படுகொலையொட்டி தலைநகர் டெல்லியில் நடந்த கலவரம். மற்றொன்று, கோத்ரா ரயில்பெட்டி எரிப்பைத் தொடர்ந்து குஜராத்தில் அரங்கேறிய கலவரம். டில்லியில் நடந்த கலவரத்தில் பெரும் எண்ணிக்கையிலான சீக்கியர்களும் குஜராத்தில் இஸ்லாமியர்களும் கொல்லப்படடனர். அவர்களது கோடிக்கணக்கான சொத்துக்கள், சூறையாடப்பட்டன, வாழ்வாதாரங்கள் நிர்மூலமாக்கப்பட்டன. இப்படுகொலைகளுக்குப் பின் நடத்தப்பட்ட நாடாளுமன்றத் தேர்தலில் அதற்கு முன்பும், பின்பும் இல்லாத வகையில் காங்கிரஸ் அதிக எண்ணிகையிலான இடங்களைப் பிடித்ததெனில், குஜராத்தில் சட்டமன்றத் தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை முதல்வராகி இன்னும் பிரதம வேட்பாளர் என்று பேசப்படவும் அக்கலவரங்கள் வித்திட்டது

        இந்த இரு கலவரங்களைப் பற்றியும் மனோஜ் மித்தா என்ற பத்திரிகையாளர் நூல்கள் எழுதியுள்ளார். ‘டெல்லியை ஒரு மரம் உலுக்கியபோது; 1984 படுகொலைகளும் அதற்குப் பின்பும் (When a tree shook Delhi : The 1984 carnage and its aftermath)  என்ற நூலிலும், “உண்மையைக் கண்டறிதலின் புனைவு : மோடியும் கோத்ராவும்’ (The Fiction of fact finding : Modi and Godhra) நூலாகவும் பதிவு செய்துள்ளார்.

        நரேந்திர மோடி பிரதம் வேட்பாளராக முன் நிறுத்தப்படும் இந்த வேளையில் மனோஜ் மித்தாவின் மேற்படி ஆய்வு நூல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடங்கி, உச்சநீதி மன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு வரை நன்கு அலசி ஆராய்ந்துள்ளார். ஒவ்வொரு நிகழ்வையும் அணுகி ஆராய்ந்து வினாக்களைத் தொடுக்கிறார். ஒவ்வொரு வினாவும் மோடியை நோக்கியே விரல் நீட்டுகின்றன. நானாவதி விசாரணைக் குழு தொடங்கி சிறப்பு புலனாய்வு குழுவரை, ஒரு தேர்ந்த பத்திரிகையாளர் என்ற ஆய்வு நெறியையும் அணுகுமுறையையும் கடைபிடித்துள்ளார்.

        கீழமை நீதிமன்றங்கள் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை வழக்குகள் எப்படி தேங்கிக் கிடக்கிறது. இதனால் நீதி கிடைப்பது அல்லது வழக்கு முடிவது எவ்வளவு தாமதப்படுகிறது என எல்லோருக்கும் தெரியும். இதற்காக மத்திய அரசு நாடு முழுவதும் விரைவு நீதிமன்றங்களை அமைத்தது, இந்த விரைவு நீதிமன்றங்களை முதன்முறையாகத் தவறாகப் பயன்படுத்தியது. நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசுதான் என்னும் அதிர்ச்சி தரும் தகவல்களை இந்நூல் மூலம் அறியமுடிகிறது. குஜராத் மாநிலத்தில் 2002ல் ஒவ்வொரு பகுதியிலும் கொத்துக் கொத்தாய் படுகொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்களின் வழக்குகளை அவசர அவசரமாக போதுமான சாட்சியங்கள் இன்றி அரைகுறையாக அரசு தரப்பு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்கிறது. விரைந்து முடிக்கிறோம் என்ற பெயரில் நீதிமன்றம் வேறு வழியின்றி, “போதுமான சான்றுகள் இல்லை. சாட்சிகள் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை”  என தீர்ப்புகள் அளிக்கப்படுகின்றன.

        ஒரு சடலம் அடையாளம் காணப்பட முடியவில்லையெனில் அதனை எவ்வாறு அடக்கம் செய்வது யாரிடம் ஒப்படைப்பது என்ற தெளிவான விதிமுறைகள் அரசிடம் உள்ளது. பெருவாரியான மக்களுக்கும் தெரிந்த உண்மை இது. ஆனால் கோத்ரா ரயில் எரிப்பில் பலியான 58 பேரில், 4 பேர்களின் அடையாளம் காணப்பட்டு சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகின்றன. இந்தியாவையே அதிர்வுக்கு உள்ளாக்கிய இச்சம்பவம் நடந்து 12 மணிநேரத்திற்குப் பின்னரும் உறவினர்கள் வராமையாலும், அடையாளம் காணமுடியாமல் இருந்தன என்ற காரணத்தாலும் 54 பேரின் உடல்கள் அகமதாபாத்திற்கு அரசு மருத்துவமனைக்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அவை உறவினர்கள் வருகை வரை பாதுகாக்கப்பட்டு இருந்தால் பரவாயில்லை. அதற்கு பதிலாக, ஜெயதீப் பட்டீல் என்னும் விஷ்வ இந்து பரிஷத்தின் குஜராத் மாநில முன்னாள் பொதுச்செயலரிடம் ஒப்படைக்கப்படுகிறது அடையாளம் தெரியாத சடலங்களை இவ்வாறு ஒப்படைப்பதென்பது சுதந்திர இந்தியாவில் இதற்கு முன்பும் பின்பும் நடைபெறாத சம்பவம். இந்த சடலங்களைப் பெற்றுக் கொண்ட ஜெயதீப் பட்டேல் தான் மருத்துவர் மாயா கோட்னானியுடன் இஸ்லாமியர்கள் மீதான படுகொலைகளுக்காக பின்னர் கைது செய்யப்பட்டவர்.

        சுதந்திரம் அடைந்து இத்தனை ஆண்டுகளில், இத்தனை மாநிலங்களில், எத்தனை முதல்வர்கள் வந்துபோய் இருப்பார்கள். இதில் எந்தவொரு முதல்வரும் வகுப்புக் கலவரங்களுக்காக குற்றவாளிக் கூண்டில் ஏற்றி விசாரிக்கப்பட்டது இல்லை. நரேந்திர மோடி மட்டுமே இவ்வாறு விசாரிக்கப்பட்டார் எனத் தொடங்கும் அத்தியாத்தில் எப்படியெல்லாம் புலனாய்வுக் குழு மோடி தப்பித்துக் கொள்ளும்படியான கேள்விகளைக் கேட்டது. எப்படியெல்லாம் மடக்கிக் கேட்கத் தவறியிருக்கிறது என்று விவரிக்கிறார் மித்தா. அதுமட்டுமின்றி 2002ல் நடந்த படுகொலைகளுக்கு 2009ஆம் ஆண்டு தான் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க உத்தரவிடப்பட்டது.  அதிலிருந்து 11 மாதம் கழித்துத்தான் முதல் குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டிருந்த மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரித்தது என்கிறார். சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.கே.இராகவன் அவர்களின் நம்பகத்தன்மையை தக்க ஆதாரங்களுடன் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார். இவையும் கூட அவர் தப்புவிக்கப்பட காரணங்களில் ஒன்றா என்ற கேள்வியை எழுப்புகிறார். அந்த அத்தியாயத்தை முடிக்கும் போது, “ சரியான கேள்விகள் கேட்கப்படாத போது சரியான ஆதாரங்களோ, சரியான முடிவுகளோ கிடைக்காது” என முடிக்கிறார். 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிறப்புப் புலனாய்வு அறிக்கையின் மீதான வாதம் முடிவுற்றபோதே பாஜக தனது பிரதம மந்திரி வேட்பாளரை மோடிதான் என முடிவு செய்துவிட்ட்து என்பதை அனுமானமாக கூறுகிறார்.

        2002ல் படுகொலை செய்யப்பட்ட முஸ்லீம் மக்கள் பற்றி 2013ல் கருத்துக் கூறும் போதுகூட ”காருக்குக் இடையில் சிக்கிய பூனைக் குட்டி” என்றார் மோடி. அந்தப் பூனைக் குட்டிகள் மீது ஒரு முறை அல்ல பல முறை கார் ஏறி இறங்கியது என்பதை மித்தா வர்ணிக்கும் போது நெஞ்சம் பதறுகிறது. உதாரணமாக முதல்முறையாக முஸ்லீம்களை தங்களது கிராமங்களில் இருந்தும் தெருக்களில் இருந்தும் வெளியேறும்படி அச்சுறுத்தி வெளியேறிய மக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்காமல் விட்டது. இரண்டாவது முறையாக, கூட்டம் கூட்டமாக ஓடிவந்த மக்களை பல கிலோ மீட்டருக்கு வாகனங்களில் துரத்தி, நடுரோட்டில் வீதிகளில் ஆடுகளை வெட்டிச் சாய்த்தது போல சாய்த்தது. மூன்றாவது முறையாக, பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகளையும், வேண்டுகோள்களையும் நிராகரித்து, அறைகுறை ஆவணங்களுடன் வழக்குகளை நீதிமன்றங்களுக்கு அனுப்பியது. நான்காவதாக தவிர்க்க இயலாமல் போதுமான சாட்சியங்கள் இன்றி கொலைக் குற்றவாளிகளை விரைவு நீதிமன்றங்கள் விடுதலை செய்தது ஆகிய நான்கு முறை பூனைக்குட்டிகள் கார் சக்கரத்தில் நசுங்கியது என மித்தா கூறுவது கண்களை கலங்க செய்கிறது. இந்நூலை படித்து முடிக்கும்போது, உச்சநீதிமன்றம் நரேந்திர மோடிக்கு “கிளீன்சிட்” அங்கீகாரம் கொடுத்திருந்தாலும் அவற்றை மனம் ஏற்க மறுப்பது நியாயம் என்றே தோன்றுகிறது.


        நாட்டில் இப்படிப்பட்ட துயர நிகழ்வுகள் நடக்கும் போது அவை மித்தா போன்ற பத்திரிகையாளர்கள் உழைப்பால் சிறந்த காலாகாலத்திற்கும் பயன்படும் ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும் மக்கள் வாங்கிப் படித்து பரவலாக விவாதிக்க வேண்டும்.