Monday, July 28, 2014

பொதுப்பள்ளிக்கான பாதை………………… 1

0 comments
 கரும்பலகை அழிப்பதற்கு
காகிதம் கேட்டேன்.
கிழித்துக் கொடுத்தான்
நேற்றெழுதிய பாடங்களின்
பக்கங்களை..
இப்படித்தான்
வீணாய்ப் போகிறது.
பலகையிலும் பதியாமல்
பக்கங்களிலும் பதியாமல்
சில பாடங்கள்...   ------------------ கரும்பலகையில் எழுதாதவை (பழ. புகழேந்தி)

இடம் : நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம்
பள்ளி : ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி

அந்த கிராமத்தின் மொத்த மக்கள் தொகையோ 349, அதில் பள்ளி வயதுக் குழந்தைகள் 30. ஆனால் இவ்வூரில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ 172. மேற்படி முப்பது குழந்தைகள் தவிர 142 குழந்தைகள் எங்கிருந்து வருகிறார்கள்? சுற்றுவட்டாரம் நான்கு கிலோமீட்டர் தொலைவில் இருந்து வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட, நாமகிரிப்பேட்டை ஒன்றியத்திலிருக்கும் ஊத்துப்புளிக்காடு என்னும் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிக்கு பெற்றோர் வேன் வைத்து அனுப்புகிறார்கள். 1999ஆம் ஆண்டு வெறும் 34 குழந்தைகள் மட்டுமே படித்து வந்த இப்பள்ளியில் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் 41, 51, 56, 57, 64, 76, 78, 96, 111, 140, 172 என படிப்படியாக அதிகரித்துள்ளது. உத்துப்புளிக்காடு என்னும் இந்த ஊருக்கே பஸ் வசதியில்லை. ஆனால் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து 20 வேன்களில் இருந்து வந்து செல்கின்றனர் பள்ளி குழந்தைகள்.


       எப்படி இது சாத்தியம் என ஆச்சரியத்தோடு கேட்கும் நம்மிடம் விடாமுயற்சி, கடின உழைப்பு, கடின உழைப்பு மட்டுமே என்று சுருக்கமாக கூறுகிறார்கள். கொஞ்சம் விவரமாக சொல்லுங்களேன் என்ற பிறகு, “எங்கள் பள்ளி காலை 0830 மணிக்கே துவங்கிவிடும். பள்ளி நேரமான 9.15 மணிக்குள் ஆங்கில வகுப்பை நடத்தி முடித்துவிடுவேன். 5ஆம் வகுப்பு படித்து முடித்து செல்லும் மாணவனுக்கு ஆங்கிலத்தில் 250 வினைச் சொற்கள் நன்கு தெரிந்திருக்கும். 12 டென்சும் அதன் பயன்பாடு, வினைச் சொற்களில் பொருத்தி வாக்கியமாக எழுதுவது வரை தெரியும். இதன் வழியாக ஆங்கில பாடபுத்தகத்தில் கூறப்பட்டுள்ள ஆங்கிலம் மிக எளிமையாக்கப்படுகிறது. மாணவர்களுக்கு ஆங்கிலம் நமக்கு வருகிறது; கற்றுக் கொள்ள முடிகிறது என்ற நம்பிக்கை ஏற்பட்டு, தமிழையும் எளிமையாக கற்கத் தொடங்குகிறார்கள் என்று முடித்தனர் பள்ளி ஆசிரியர்கள்.

       ஆசிரியர்களின் அணுகுமுறை, கற்பிக்கும் விதம் ஆகியவை 0830 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு வந்துவிட்டாலும் மாலை 4 மணிவரை புத்துணர்வோடு இருக்க உதவுகிறது. இந்த புத்துணர்வுக்கு காரணம் மனப்பாடம் செய்ய வைக்காமல் பாடங்களை உயிரோட்டமாக புரிந்து கொள்ள வைப்பதே. எல்லாம் எளிதாக கொஞ்சம் கொஞ்சமாக நகர்கிறது. சுமையின்றி கற்றல் என்பதற்கு பொருள் இருக்கிறது. ஒரு குழந்தைக்கு 10 வார்த்தை தெரிகிறதா? 11 வார்த்தையாக அறிந்து கொள்ள வைப்பது; 12 வார்த்தை தெரியும் குழந்தைக்கு இன்னும் ஒன்று என்று ஒரு படி மேலே செல்வது என இப்படித்தான் குழந்தைகளின் கற்றல் ஆற்றலை முன் நகர்த்தி வெற்றிப்பாதைக்கு நகர்த்துகிறார்கள்.

       தமிழ் பாடத்தில் சிலப்பதிகாரப் பாடம் நடத்த வேண்டுமா? புத்தகத்தை எடு, படி, புரிகிறதா எனப் போவதில்லை. காவிரி ஆற்றில் இருந்தோ, மதுரையில் இருந்தோ துவங்கி, ஒரு கதைபோல சொல்லிச் செல்கிறார்கள். இக்கதையின் ஊடாக, மேற்படி இடங்கள் சம்பவங்கள் பற்றி குழந்தைகளுக்கு தெரியும் விசயங்களையும் சேர்த்துக் கொள்கிறார்கள். கதையும் முடியும்போதுதான், புத்தகப் பாடம் தொடங்குகிறது, “அட, இவ்வளவுதானா? என்று பாடம் எளிமையாகி விடுகிறது.

       ஜூன் மாதம் பள்ளி தொடங்கியவுடன் இம்மாதம் பழகுநர் போல் வைத்துக் கொள்கிறார்கள், மூன்று, நான்கு மாதங்களுக்கு வலுவான அடித்தளம் இட்டபிறகு கற்றல் வேகம் பிடிக்கிறது இங்கு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகுப்பிலும் புதுக் குழந்தையாக பாவிக்கிறார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கிறாய் உனக்கு இதுகூடத் தெரியவில்லையா? என்ற கேள்விக்கு இப்பள்ளியில் இடமில்லை. அவசரப்படாமல் தெரியாதவற்றை தெரிவித்து பின் தொடங்குகிறது பாடம்.


மாணவர்களைப் படிக்க வைக்க சிறந்த ஒரே ஒரு மந்திரத்தைச் சொல்கிறார் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர். பாராட்டிப் பாராட்டியே படிக்க வைக்கிறோம்’ என்பதே அம்மந்திரம். பள்ளியின் செயல்பாடுகள் பெற்றோர்களுக்கு நன்கு தெரிவதால், குழந்தைகளுக்கு தேவையானது என பட்டியலிடும் விடயங்களை எளிதாக உடனுக்கு உடன் பெற்றோர்கள் செய்து கொடுக்கின்றனர். தனியார் பள்ளிகளோடு போட்டி போட வேண்டிய தேவை இருப்பதால் தனியாக சீருடை, பெல்ட், அடையாள அட்டை, டைரி என சில பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது. தனியார் பள்ளிக் கட்டணங்களோடு ஒப்பிடும் போது இந்த செலவுகள் எம்மாத்திரம்?.

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை பள்ளியில் இருக்கிறார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் சார்பில் ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மாதச்சம்பளமாக 3000 ரூபாயினை தலைமை ஆசிரியர் தனது சம்பளத்தில்  இருந்துதான் கொடுக்கிறார். சனி, ஞாயிறுகளில் மாணவர்களை வரச் சொல்லி சிறப்பு வகுப்புகளை எடுக்கிறார். இது தவிர கையில் இருந்து இரண்டரை லட்சம் செலவு செய்துள்ளார். தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அன்றி விடுமுறை எடுப்பதில்லை. ஆனாலும் தான் பள்ளி வளர்ச்சிக்கு காரணம் அல்ல என்று கூறுகிறார். முதலில் நான் எப்போதும் தலைமை ஆசிரியர் என்ற தோரணையோடு நடந்து கொள்வதில்லை என்று தொடங்குகிறார். ஒரு உதவி ஆசிரியரிடம் ஒரு செய்தி சொல்ல வேண்டும் என்றால் கூட இவர் சம்மந்தப்பட்ட ஆசிரியரைக் கூப்பிட்டு அனுப்புவதில்லை. அந்த ஆசிரியரின் வகுப்பறைக்கு சென்று அந்த விசயத்தைக் கூறுகிறார். விடுப்புத் தேவையா ஏன்? எதற்கு? இன்று இரண்டு பேர் லீவு. நீங்கள் நாளைக்கு எடுங்கள் என்று சொல்வதில்லை. ஆனால் இங்கு பணிபுரியும் ஓர் ஆசிரியர் கூட அனுமதிக்கப்பட்ட விடுப்பு முழுவதையும் ஓர் ஆண்டில் எடுப்பதில்லை. அவசரத் தேவைகள் நிமித்தமே பாடவேளையில் அலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். மதிய உனவு இடைவேளையின் போது இதர அழைப்புகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இந்தப் பள்ளிக்கு மாறுதலாகி வந்தவுடன் பள்ளிச்சூழல், மாணவர் வருகை, அவர்களது செயல்பாடு, தலைமை ஆசிரியர் செயல்பாடுகள், உள்ளூர் ஒத்துழைப்பு ஆகியவற்றை பார்க்கும் ஆசிரியர்கள் இயல்பாகவே இதில் ஒன்றிப் போகிறார்கள். அல்லது இப்பள்ளியில் இருக்கும் வரை முழுமனதுடன் ஒத்துழைக்கிறார்கள்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கூட்டங்களில், காலை உணவின் முக்கியத்துவம், காலைக் கடன்களை சரிவரச் செய்ய வேண்டியதன் அவசியம், அயோடின் கலந்த உப்பு, பல் துலக்குதல், நகம் வெட்டுதல் ஆகியவற்றில் பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்று பயிற்றுவிக்கப்படுகின்றனர். பெற்றோர்களை எங்கு பார்த்தாலும் நின்று, அந்த மாணவர் பெயரை சொல்லி, அவன் எப்படிப் படிக்கிறான் இன்னும் வீட்டில் என்ன மாதிரி உதவியாக இருக்கவேண்டும் என்று கலந்துரையாடுகிறார். பெற்றோர் பள்ளிக்கு வந்தால் அமரவைத்து பேசுதல், அவர்கள் கூறும் கருத்துக்களுக்கு மதிப்பளித்தல் பள்ளியின் சிறப்பு இயல்புகளில் ஒன்று.

மாணவனின் தவறுக்கு ஆசிரியர்களே காரணம் என்பதில் இவர்கள் அழுத்தம் திருத்தமாக நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். மாணவர்கள் வகுப்பறையில் பேசிக்கொள்வது, சண்டையிட்டு கொள்வது, என எல்லாமே நாம் அங்கு இருந்தும் இல்லாதிருப்பதில் விளைவே. நமது கவனம் வேறு திசையில் இருப்பதோ, நமக்கு நண்பர்களோ, பெற்றோரோ வந்திருக்கும் தருணத்தில், ஆசிரியர் மாணவனை கவனிக்கவில்லை என உணரும்போது வேறு வேலைகளை மாணவன் செய்யத் தொடங்குகின்றார்ன். ஆசிரியர் வகுப்பறையில் இருக்குபோதே இப்படியெனில் அதிகபட்சம் பத்து வயது தாண்டாத குழந்தைகள் எப்படியிருக்கும் நினைத்துப் பாருங்கள் என்கிறார் தலைமையாசிரியர் தங்கராசு. பாடவேளையின் போது கற்றல் செயல்பாடுகளில் நாம் ஈடுபடாமல் இருந்தால் அக்குழந்தையின் நேரத்தை நாம் திருடிக் கொள்கிறோம் என்பது பொருள். அக்குழந்தையின் நேரத்தை திருட, வீணாக்க நமக்கு அதிகாரம் அளித்தது யார் என்று அவர்கள் எழுப்பும் கேள்வி நமக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

இப்பள்ளி மாணவர்களோடும் ஆசிரியர்களிடமும் கலந்துரையாடும்போதும், இப்படியும் ஆசிரியர்கள் இருக்கிறார்களா என்ற பலத்த  சந்தேகத்தை பல சம்பவங்கள் உருவாக்குகிறது. காலையில் தலைமை ஆசிரியர் அறைக்கு கையெழுத்துப் போடப் போவது கூட தலைமை ஆசிரியர் நேராக முகத்தைப் பார்க்க மாத்திரமே. நேராக காலை  நேரத்தில் பார்த்துக்கொள்வதும், பேசிக்கொள்வதும் கூட காலவிரையம் எனக் கருதுகிறார்கள். தினமும் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டாலே ஐயோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் குழந்தைகளை விட்டு பிரியப்போகிறோமே என்ற கவலை வந்துவிடும் என்கிறார்கள். தொடக்க கல்வியில் இன்று மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்று இந்த CCE முறை. ஆசிரியர்கள் எழுதுகிறார்கள், எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். கற்பித்தலை பாதிக்கும் முக்கிய பிரச்னை இது. ஆனால் இப்பள்ளி ஆசிரியர்கள் இந்தப் பிரச்சனைக்கு தங்கள் கடும் உழைப்பால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் செய்கிறார்கள். எல்லா வித எழுத்துப் பணிகளையும் வீட்டுக்கு எடுத்துசென்று முடித்துவிடுகின்றனர். ஒவ்வொரு நாளும் தங்கள் குழந்தைகளிடம் மாலை FEED BACK பின்னூட்டம் கேட்டு விடுகின்றனர். டீச்சர் இன்னைக்கு நீங்க சோகமா இருந்தீங்க. இன்னைக்கு நீங்க நடத்தியது புரியல இது மாதிரி நடத்தாதீங்க. நல்ல நடத்துரீங்க என பளிச்சென கூறிவிடுகின்றனர். அக்குழந்தைகளுக்கு இவ்வுரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆண்டு இறுதியிலோ முதலிலோ பள்ளி சேர்ப்பு இயக்கம், செயல்பாடுகள் உண்டா என்று கேட்டால்  எங்கள் குழந்தைகளே எங்களுக்கு கேன்வாஸ் என பதில் அளிக்கிறார்கள். எங்கள் பள்ளியில் ஆளுக்கு ஒரு வகுப்பு உண்டு ஆனால் அதே சமயம் இல்லை என்கிறார்கள். அது என்ன என்று கேட்டால், ஒவ்வொருவருக்கும் ஒரு வகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் யார் ஒருவரும் இது அவருடையது. இது என்னுடையது என்னும் பாகுபாடு கிடையாது என்று  கூறுகிறார்கள். இந்தப் பள்ளியை பற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு மாவட்ட அறிவியல் இயக்க செயலரிடம் தெரிவித்தேன். கார்த்திகேயனும் தலைவர் சக்கரவர்த்தியும் உடனடியாக புறப்பட்டு இருசக்கர வாகனத்திலேயே ஊத்துப்புலிக்காடு சென்று சேர்ந்தனர். ஈரோட்டில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இப்பள்ளியின் தூரம் தெரியாமையால் சென்று சேர மாலை நேரம் ஆகிவிட்டது. சார் நீங்கள் காலையில்  வந்து இருந்தால் எங்கள் குழந்தைகள் சாப்பிடும் அழகை பார்த்திருக்கலாம் என்றனர். சத்துணவு சமைக்கும் ஆயா கூட தனிகவனம் எடுத்து சமைக்கிறார். குழந்தைகள் வரிசையாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். ஒரே ஒரு பருக்கைக் கூட சிந்தாமல் சாப்பிடுவர். நாங்களும் சத்துணவையே சாப்பிடுகிறோம் என்கின்றனர்.


நெடிது உயர்ந்த சுற்றுச்சுவர். பள்ளி நிறைந்த பசுமையான மரங்கள். மிகக் குளிர்ச்சியான புங்க மரங்கள், அழகூட்டும் அரளிச் செடிகள், காந்தி திருவள்ளுவர் விவேகானந்தர் சிலைகள் என அத்துவானக்காட்டில் இப்பள்ளி அசத்துகிறது. உள்ளடங்கியிருக்கும் இப்பள்ளிக்கு முன்பெல்லாம் அதிகாரிகள் வருவது அரூபம். ஆனால் இப்போது இப்பள்ளியைக் காண அதிகாரிகள் வருவது அதிகரித்துள்ளது. நம்மைப் போன்ற ஆர்வலர்களும் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இப்பள்ளிக்கு இன்னும் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. கட்டிட வசதியில்லை. அரசு தன் தரப்பிற்கு செய்ய வேண்டிய பணிகள் நிறைய உண்டு. ஆனால் முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு சான்று, ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி.


பயணம் தொடரும்…………

படங்கள் உதவி : கார்த்திகேயன், ஈரோடு.

Sunday, July 27, 2014

பொதுப்பள்ளிக்கான பாதை.......! - அறிமுகவுரை

0 comments
அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துதல் பள்ளிக் கல்வியில் வணிகமயத்தை கட்டுப்படுத்தக் கோருதல் கல்வியின் தரத்திற்கும் ஜனநாயக முறைமைக்கும் ஏற்ற ஒரே வழிமுறையான பொதுப்பள்ளி அருகமைப் பள்ளி முறையை கட்டி அமைக்கும்படி அரசை நிர்பந்திக்க செய்தல். இம்மூன்று கோரிக்கைகளில் முதல் இரண்டு கோரிக்கைகள் உடனடி கோரிக்கைகள்;  ஒன்றுக்கொன்று தொடர்புடைய கோரிக்கைகள் பள்ளிக் கல்வியை தனியார் பள்ளி நிர்வாகங்களின் லாப வெறியை முடக்கி போடாமல் மாய்மாலங்களை திருகுதாளங்களை மோசடிகளை கட்டுப்படுத்தாமல் அரசுப் பள்ளிகளை காப்பாற்றுதல் என்பது சாத்தியமில்லை. அதே சமயம் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் அர்ப்பணிப்பை அதிகரிக்க வேண்டும். இங்கு அங்கென சிற்சில பள்ளிகளில் தங்கள் கடமை உணர்வால் அர்ப்பணிப்பால் தியாக உள்ளத்தால் மாணவர் சேர்க்கை வீழ்ச்சி காலத்திலும் எழுச்சி கொள்ள செய்திருக்கும் பள்ளி ஆசிரியர்களை முன்மாதிரியாக கொள்ள வேண்டும். ஆங்காங்கு தனித்தனியாக எடுக்கும் முயற்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும். “அட இது நமக்கு படலையே இத்தனை நாளாக எப்படி விட்டோம்” என்று நாம் விட்டுப் போன பணிகளைத் தொடங்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு நிகராக தனியார் பள்ளிகள் நிற்க முடியாது என தடைகளை தாண்டி நிரூபிக்க வேண்டும். அரசு செய்ய வேண்டிய அனைத்து விஷயங்களையும் சமரசமின்றி அமுல்படுத்த கோரி ஆசிரியர் அமைப்புகள், மாணவர் இயக்கங்கள், தன்னார்வ இயக்கங்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் கூட்டாகவோ தனித்தனியாகவோ கேட்கத் தொடங்க வேண்டும்.



பொதுப்பள்ளிக்கு வித்திடும் முதல் கட்ட பணிகளுக்கு தடைகளை தவிடுபொடியாக்கி தொடக்கப் பள்ளிகளில் மூடுவிழாக்களை முறியடித்து சில அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி கண்டுள்ளனர். அரசுப் பள்ளிகளை பூத்து குலுங்க செய்துள்ளனர். அவர்களை அடையாளப்படுத்துவது நமது முதல் கடமை. உங்களுக்கு இது போன்ற பள்ளிகள் தெரிந்திருந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம். அந்தந்த மாவட்டங்களில் இருக்கும் எங்கள் அறிவியல் இயக்க நண்பர்களிடத்தும் ஆர்வலர்களிடமும் கூறி ஆவணப்படுத்தி இந்த வலைப்பதிவில் பதிவு செய்யலாம். பின்னர் நூலாகவும் வெளியிடுவோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிகக் குறைவான மாணவர் சேர்க்கை இருந்து தற்போது ஆசிரியர்களின் சொந்த முயற்சியால், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் கூட்டு முயற்சியாலும் தூக்கி நிறுத்தியிருக்கும் பள்ளிகளை மட்டுமே இங்கு முதல்கட்ட ஆய்வுக்கு எடுக்கவிருக்கிறோம். தொடக்கப் பள்ளிகளில் கூட தொடர்ச்சியாக தொய்விலாது சிறப்பாக நடைபெற்று வரும் பள்ளிகளை இம்முதல்கட்ட ஆய்வில் ஆவணப்படுத்தவில்லை. அதேபோல் மிக நன்றாக செயல்பட்டுவரும் அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகள் பற்றியும் தற்போதைக்கு ஆய்வுக்குட்படுத்தவில்லை. அழிவின் விளிம்பில் உள்ள தொடக்க நடுநிலைப் பள்ளிகளை எவ்வாறு கடின உழைப்பால் மீட்டெடுத்தார்கள் என்பதை இனி ஒவ்வொரு பதிவாக பார்க்கலாம்……  

நீளும் பயணத்தின் அடுத்த சுவடுகள் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தின் ஊத்துப்புளிக்காடு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி...

Friday, July 25, 2014

பொதுப்பள்ளிக்கான பாதை…………….!

0 comments
நண்பர்களே! பொதுப் பள்ளி முறைக்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ள நிலையில் காமராஜரின் கல்விப்பாதை ஒரு குறியீடு. ஆறாம் வகுப்பு மட்டுமே படித்து பொதுப்பாதை சமைத்த அவரது முக வெளிச்சத்தில் முன்னேறுவோம். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், ஆர்வலர்கள், அனுதாபிகள் என அனைவருமே களத்தில் இறங்கி பொதுப் பள்ளி முறையைக் காக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. அனைத்தையும் செய்யவேண்டியது அரசாங்கம், நாம் என்ன செய்ய? என்கின்றனர் ஒரு சாரார். எல்லாம் வாத்தியார்களால போச்சு என்று புலம்புகின்றனர் ஒரு சாரார். இப்படி பல்வகையில் தன்னைவிடுத்து மற்றவர்களை குற்றம் சொன்ன காலங்கள் இனி கடந்தவையாக இருக்கட்டும். நண்பர்களே! தோழர்களே, போதும். பொதுப் பள்ளியா!! அது இந்திய நாட்டில் சோசலிசம் மலர்ந்தால் கூட பொதுப்பள்ளி மலர பல பத்தாண்டுகள் ஆகுமே என்ற அவநம்பிக்கை எவருக்கும் வேண்டாம்.


அரசுப் பள்ளிகளை வலுப்படுத்த ஒரு வலுவான முக்கூட்டணி தேவைப்படுகிறது. ஒன்று அரசு, இரண்டு ஆசிரியர் மூன்று பெற்றோர். அரசு என்றால் மக்கள் நல அரசு என்று நாம்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். மக்கள் நல அரசு என்பது உண்மையெனில் கல்வியும் மருத்துவமும் இவ்வளவு செலவு பிடிக்கக்கூடிய பண்டமாக மாற்றப்பட்டிருக்குமா? மோடி அரசாக இருந்தாலும் சரி அதற்கு முந்தைய மன்மோகன் அரசாக இருந்தாலும் சரி. 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை நிச்சயமாய் உண்டு கார்பரேட் கம்பனிகளுக்கு? ஒரே ஒரு தருணத்தில் தான் நமது ஆட்சியாளர்கள் மக்களைப் பார்த்து பயப்படுகிறார்கள். ஓட்டுக்கு வேட்டு விழும் என்று தெரிந்தால் மட்டுமே பயப்படுவார்கள். அடுத்த தேர்தலுக்கு வாக்குக் கேட்க வரும்போது “பொதுப்பள்ளி முறையை அமுல்படுத்துவோருக்கு எங்கள் வாக்கு” என்று சொல்லிப் பாருங்கள். பெரும் பகுதிகளின் குரலாம இந்த மந்திரத்தை ஒலிக்கச் செய்து பாருங்கள். பள்ளிக் கல்வியில் தலைகீழ் மாற்றம் தானாய் வரும். ”குதிரைக்கு கொம்பு முளைக்கட்டும்” என்று அவநம்பிக்கையை மீண்டும் துளிர்க்க விடாதீர்கள்.

அரசுப் பள்ளியை வலுப்படுத்துவோம் என்று யாராவது பேசினால், உடனே “உன் பிள்ளை எங்கே படிக்கிறது” எனக் கேட்டு வாயை அடைத்துவிடுகிறோம். அதுவும் இந்தக் குரல் அரசுப் பள்ளி ஆசிரியரின் குரலாக இருந்துவிட்டால் சொல்லவே வேண்டா. அரசு மருத்துவமனையை வலுப்படுத்து என்று கேட்பவர் அரசு மருத்துவமனைய்லி வைத்தியம் செய்பவராக இருக்க வேண்டுமா? “ கார் வைத்திருப்பவன் கம்யூனிசம் பேசுகிறான்” என்று சொல்கிறார்கள். மாடு வீட்டில் இருந்து கொண்டு குடிசைவாசியைப் பற்றி பேசக்கூடாதா? அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கோ அரசு ஊழியர்களுக்கோ விதிவிலக்குக் கோரும் நோக்கம் இதுவல்ல. அரசு, ஆசிரியர் பெற்றோர் என்ற முக்கூட்டணியில் உள்ள அனைவரின் பொறுப்புகளையும் அலசுவோம். இந்த அலசல் வழி நம்மை நாம் செப்பனிட்டுக் கொண்டு அரசு இயந்திரத்தை அசைப்போம்.

ஆசிரியர்களும், பெற்றோர்களும் சிவில் சமூகமும் முதலில் நம்மை நாம் கிள்ளிப் பார்த்துக் கொள்வோம். தூக்கத்தில் இருந்து விழித்து எழுவோம். நம்மை நாமே என்னதான் செய்து கொண்டாலும், நாம் ஒரு சமூக விலங்குதானே. இந்த சமூகத்தை ஆட்டுவிக்கும் குடும்பம், மதம், கலாச்சாரம், ஊடகங்கள், சாதி ஆகிய நிறுவனங்களை உலுக்கிப் பார்ப்போம். எதை உலுக்கினாலும் இறுதியாய் நாம் அசைத்துப் பார்க்க வேண்டியது ஆலமரமாய் நிற்கும் அரசு என்னும் நிறுவனம்தான். அனைவரும் பிடித்து அரசை வலுவாய் உலுக்கும்போது, அரசு பள்ளிகளை வலுப்படுத்த வேண்டிய நிர்பந்தமும், பள்ளிக் கல்வியில் வணிகமயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவையும் அதனைத் தொடர்ந்து பொதுப்பள்ளி அருகமைப் பள்ளிக்கு வடிவம் கொடுக்கவேண்டிய சூழலும் கண்டிப்பாய் ஏற்படும்.

ஆசிரியர்கள் தங்களைத் தாங்களே சுயவிமர்சனம் செய்து கொள்வதற்கு முன்னர் ஆசிரியர் சங்கங்கள் எடுத்த முன்முயற்சிகளையும் நினைவு கூற வேண்டியிருக்கிறது. 


இனி அடுத்த பதிவில் சந்திக்கலாம்……………

Saturday, July 19, 2014

தேர்வு மதிப்பெண்கள் என்ன தரக் குறியீடுகளா?

2 comments
  "நமது பள்ளியில் படிக்கும் 90 சதவிகித மாணவர்கள் 60 சதவிகித மதிப்பெண்ணுக்கு மேல் வாங்குகிறார்கள். 60 சதவிகித மாணவர்கள் 80  சதவிகிதத்திற்கும் மேல் மதிப்பெண்  பெறுகிறார்கள்...." எனப் அப்பள்ளி நிர்வாகி பேசிக் கொண்டே வந்தார். "பின்ன ஏன் நம்ம ஸ்கூலில் இருந்து  ஸ்டேட் ரேங்க் வரலைன்னு கேக்கறீங்களா?"என்று கேள்வியைக் கேட்டு நிறுத்தினார்.  "என்னாலெல்லாம் பணத்தை சாக்குப் பையில கட்டிக்கிட்டு போய் கியூவுல நிற்க முடியாது. எனக்குன்னு கெளரவம் இருக்கு" எனப் பதில் கூறிவிட்டு அடுத்த விசயத்துக்கு நகர்கிறார். அவர் கூற்றில் உண்மையுண்டோ இல்லையோ அப்பள்ளிக்கு வயது 35.  இன்று வரை ஒரு கால் பக்க பத்திரிகை விளம்பரம் கூட பள்ளி சேர்க்கைக்காக  செய்ததில்லை. அப் பள்ளியில்  பணிக்குச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரியர்கள் அரசுப் பள்ளியில் வேலை கிடைத்தாலும் இதை விட்டுச் செல்வதில்லை.

      "என்னம்மா உங்க கல்வி மாவட்டத்தில் உள்ள அந்த (பள்ளியின் பெயரைக்
 
குறிப்பிட்டு) ஸ்கூல் தான் ஸ்டேட் ஃபஸ்ட்டா வரப்போகுதா  ?", ஒரு மாவட்ட கல்வி அதிகாரியிடம் இன்னொரு அதிகாரி  கேட்ட கேள்வி இது. அதே போல அந்தக் கல்வி நிறுவனமே அவ்வாண்டு மாநிலத்தில் முதல் இடம் பெற்றது. "இதுவெல்லாம் நிஜமா?" என்று ஒருவரிடம் கேட்டால்  "பள்ளிக் கல்வி இயக்குநராகவும் தேர்வுத் துறை இயக்குனராகவும்  யார் வர வேண்டும் என தனியார் கல்வி நிறுவனங்கள்  தானே  முடிவு செய்கிகின்றன " என அடுத்த குண்டைத் தூக்கிப்  போடுகிறார். இவையெல்லாம் உண்மையா? பொய்யா? இத்தகைய கேள்விகளும் விவாதங்களும் மனசாட்சி உள்ள குடிமக்களை நிலை குலையவே செய்யும். பள்ளிக் கல்வியின் தரத்தை, கல்வி கலாச்சாரத்தை தலைகீழாக  புரட்டிப்போட்டுவிட்ட மதிப்பெண்கள், கற்றல் அடைவுகளை அளந்து பார்க்கும் கருவி என்ற கருத்தும் காலமும் காணாமல் போய் பல வருடங்கள் ஆகிவிட்டன.

அதிக மதிப்பெண்களை உற்பத்தி செய்யும் கல்வித் தொழிற்கூடங்கள்  மட்டுமே சிறந்த கல்வி நிறுவனங்களாக கல்விச்  சந்தையில் உலாவருகிறது.  இவற்றின் மதிப்பு என்பது சந்தை மதிப்பு. 'சந்தை' என்ற சொல்லுக்குள் அனைத்தும் அடக்கம். பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களால் மட்டுமே பன்னிரெண்டாம் வகுப்பின் சந்தை மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. பள்ளிக்கூடம் மாணவர்களை சந்தைப் பொருளாக பாவிக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளையும் பள்ளிகளையும் இலாபத்தை உச்சப்படுத்தும் பொருட்களாக அணுகுகின்றனர்.

    
இவ்வாறு கல்வி என்பது சந்தைப் பொருளாக மாற்றம் அடைந்த பின், இலாபத்தை உச்சப்படுத்துதலே மைய நோக்கமாக மாறிவிடுகிறது. இலாபத்தைத்  தீர்மானிக்கும் கருவிகளாக பள்ளியின் விளம்பரம், முதலீட்டின் அளவு, தங்கள் பள்ளியே சிறந்த பள்ளி என தரத்தை வேறுபடுத்திக்கட்ட (product differentiation) எடுக்கும் முயற்சிகள், அரசியல் சமூகப் பொருளாதார  காரணிகள்  போன்றவை அமைந்துவிடுகிறது.

தங்களுடைய பள்ளிதான் சிறந்த பள்ளி எனக் காட்டிக் கொள்ள விண்ணை முட்டும் விளம்பரங்கள். பள்ளிக் கட்டடங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை வண்ணப் பூச்சு. செயற்கை நீரூற்றுகள், நீச்சல் குளங்கள், பூச்செடிகள்,  குளிர்சாதன வகுப்பறைகள், குளிர்சாதனப் பேருந்துகள் என நீண்டு கொண்டே செல்கிறது இவர்களது யுத்திகள்.  மதிப்பெண்ணை பண்ட வேறுபாட்டுக்கான அடிப்படையாக பார்ப்பவர்கள் மற்றொரு வகையினர். இவர்களுக்குத்தான் தற்போதைய நிலையில் சந்தை மதிப்பு  மிக மிக அதிகம். இங்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதைக் கூட யாரும் பார்ப்பதில்லை. குழந்தைகள் உரிமையும், மனித  உரிமையும், கற்றல் என்பதன் அடிப்படை விதிகளும் அப்பட்டமாக மீறப்படும் இடம் இவை. இதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாத பெற்றோர்கள் 'எதிர்கால நன்மை' என்ற ஒற்றை எண்ணத்தில் இருந்து எக்காரணம் கொண்டும் வெளிவருவதில்லை. இப்பள்ளிகளை நோக்கி படையெடுக்கும் கூட்டம் அதிகரித்த வண்ணமே உள்ளது. திருப்பதி கோவில் தரிசனத்திற்கு தவம் கிடப்பதைப் போல தவம் கிடக்கின்றனர். "லாரிகளில் பிரம்பு வந்து இறங்குகிறது" என்பதைக் கூட பெருமை(!) பேசினார்கள்.

த்தகைய பள்ளிகளை நோக்கி பெற்றோர்கள் மட்டும் படையெடுக்கவில்லை. பிற  தனியார்  பள்ளிகள் அனைத்தும் இத்தகைய பள்ளிகளை பின்பற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டன. இதனால் மேல்நிலைக் கல்வி என்பது 'ஓராண்டுப் பாடம் ஈராண்டுக் கல்வி' எனச் சுருக்கிவிட்டது. பதினொன்றாம் வகுப்பில் பாடம். பன்னிரெண்டாம் வகுப்பில் மனப்பாடம் என்பது வழக்கமாகிவிட்டது. ஒரு பாடத்தை எத்தனை மனப்பாடம் செய்வது? எத்தனை முறை எழுதிப்பார்ப்பது? பாத்ரூம் போகும்போது கூட புத்தகமும் கையுமாக இருக்க வேண்டுமென நிர்பந்திக்கப்படுகிறார்கள். பள்ளியில் சேர்க்கும் போது 50க்கு 50 செய்முறைத் தேர்வு மதிப்பெண் எல்லாத் தனியார் பள்ளி மாணவர்களுக்கும்  உத்தரவாதம் செய்யப்பட்டுவிட்டது. தேர்வு மேற்பார்வைக்கு யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதும் திட்டமிட்டவாறு செய்து  முடிக்க முடிகிறது. தேர்வுகளில் குறைந்தபட்ச மதிப்பெண் எடுப்பதற்கு  மீத்திறன் குறைந்த மாணவர்கள் 'பிட்' அடித்த காலம் போய், 490க்கு மேல்  வாங்கும் மாணவர்களை ஒரு வகுப்பறையில் அமர்த்தி, பிட் அடிக்கவும் பார்த்து எழுதவும் பகிரங்கமாக அனுமதிக்கும் செயல் திட்டங்கள்  வகுக்கப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு தயவு காட்ட, எல்லாப் பக்கமும் நிறைந்திருக்கும் சாதிய சாய்மானமும் அதிகாரிகளிடத்தில் சேர்ந்து கொள்கிறது.

இத்தகைய ஆயகலைகள் அனைத்தையும் அரசுப் பள்ளிகள் செய்ய முடியாதென்றாலும் மதிப்பெண்களை நோக்கி ஓடியே ஆகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. பள்ளிகளின் தலைமை ஆசிரியர் முதல் பள்ளிக் கல்வி இயக்குனர் வரை மதிப்பெண் என்னும் மந்திரச் சொல்லுக்கு அடிமையாகிவிட்டனர். தனியார் பள்ளிகளுக்கு ஈடுகொடுத்து, மதிப்பெண் பந்தயத்தில் ஐக்கியமாகி தன்னால் இயன்ற வேலைகளை அரசுப் பள்ளிகளிலும் செய்யத் தலைப்பட்டுவிட்டது. மதிப்பெண் பிரச்சனை மதிப்பெண்ணோடு மட்டும்  முடிந்துவிடுவதில்லை. கற்றல் செயல்பாடுகளை மொத்தமாக பாதிக்கிறது. அத்திபூத்தாற்போல் அங்கொன்றுமாக இங்கொன்றுமாக இருக்கும் சமூக அக்கறை உள்ளவர்கள் தொடங்கி நடத்தி வரும் சின்னஞ்சிறிய தனியார் பள்ளிகளின் பாடுதான் பெரும்பாடு. மதிப்பெண்ணும் பெறச்செய்து, சமூக கரிசனம், இதர கற்றல் செயல்பாடுகள் ஆகியவற்றை வளர்த்தெடுக்க அவர்கள் எடுக்கும் பெருமுயற்சிகள் சொல்லிமாளாது. மதிப்பெண் என்னும் அளவுகோலின் குறைபாடுகளை விமர்சிக்காத கல்வியாளர்கள் இல்லை. அதற்கு மாற்றான அளவுகோல் உருவாக்கப்படவும் இல்லை. இளநிலை வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பெண் முறை, அதன் நடைமுறை செயலாக்கம் ஆகியவை, "தலைவலி போய் திருகுவலி வந்ததை  நினைவூட்டுகிறது". ஒட்டுமொத்தமாக கல்வியாளர் பாவ்லோ பிரைரே சொன்னதை விடவும் மிக மோசமான ஒரு கல்விச் சூழலில் கால் பதித்து நிற்கிறது நம் பள்ளிக் கல்வி. "இன்றைய கல்வி வங்கிமுறைக் கல்வி. வங்கியில் எவ்வளவு போட்டு வைத்திருக்கிறோமோ அவ்வளவே எடுக்க முடியும். அதைப்போல எவ்வளவு மனப்பாடம் செய்கிறோமோ அவ்வளவுதான் மதிப்பெண் எடுக்க முடியும்" என்றார். அவர் விமர்சித்த வங்கி முறைக் கல்வியை விடவும் கூடுதலாக, மனப்பாடம் செய்வித்தலும், மனப்பாடம் செய்விக்க புதிய யுக்திகளையும், புதிய தண்டனை முறைகளையும் கைக்கொள்வதன் மூலமாக, எவ்வளவு போட்டு வைக்கிறோம் என்பதற்கு பதிலாக, எவ்வளவு திணிக்க முடியுமோ அவ்வளவு திணிக்கவும் எவ்வளவு பிடுங்க முடியுமோ அவ்வளவு பிடுங்கவுமான மிக மிக மோசமான கல்வி முறையாக மாறிவிட்டது.

கற்றல் என்பது முற்றிலும் இற்றுப் போய், பத்து, பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் உலகத்திலேயே மிகவும் கடினமான பணியாக  மாறிவிட்டது.     2014ஆம் கல்வி ஆண்டில் 8,26,000 பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 2,900 பேருக்கு மட்டுமே மருத்துவம் கிடைக்கப் போகிறது.   அரசு மற்றும் அரசு உதவி பெரும் பொறியியல் கல்லூரிகளில் 12,131 இடங்களும் வேளாண்மை, கால்நடை மருத்துவம் என்று சேர்த்தால் கூட மொத்தம் 1400  இடங்களுக்கு மிகாது.  +2 படித்த மொத்த மாணவர்களில் 1.98 விழுக்காடு இதனைக் காட்டிக் காட்டியே மொத்த கல்வி சந்தையும் இயக்கப்படுகிறது. இவ்விடங்களைக் காட்டியே மொத்த மாணவர்களையும் பொறியில் தள்ளுகிறார்கள். இந்தக் கல்வி முறை மக்களின் வருமானத்தை இலட்ச, இலட்சம் கோடியாக காவு கேட்கிறது. மதிய தர வர்க்கத்தின் வருவாய் உயர்வில் எத்தனை சதமானத்தை கல்விச் சந்தை பிடுங்கிக் கொண்டது என்பதற்கு போதுமான ஆய்வுகள் இல்லை. "பெட்ரோல் பேங்க் தொழிலாளி ஒருவர், "இந்த ஒருவாரமாய் தூக்கமில்லை. கேட்ட பக்கம் எங்கும்  கிடைக்கவில்லை. அடுத்த வருடம் முதல் மாதம் 500, 600 எனச் சேர்த்து இந்த இம்சையில் இருந்து விடுபட வேண்டும்" என கருவிக்கொண்டு இருந்தார். தங்கள் சக்திக்கு மீறி பணத்தைத் திரட்டி கொட்டித் தீர்க்கிறார்கள். படித்தவர்கள் மிகவும் குறைவாக இருந்த காலகட்டத்தில் கூட கல்வி என்பது இவ்வளவு காசு கேட்கும் பூதமாக மக்களை மிரட்டியதில்லை. கட்டணமில்லாக் கல்வியாக இருந்து. அருகமைப் பள்ளியாக இருந்து, பொதுப் பள்ளியாக இருந்தது. அரசுப் பணத்தில் பள்ளிக் கல்வி மொத்தமும் இயங்கியது.


இதை சின்னாபின்னமாக்கி, காசு பார்க்கும் இவ்வளவு பெரிய சந்தைப் பொருளாக  மாற்றியது யார்?  ஏழைக்கும், பணக்காரனுக்கும் ஏன் ஒவ்வொரு வருவாய் பிரிவினருக்கும் ஒரு பள்ளி என்று கட்டமைத்தது யார்? இந்த நாட்டின் சாதியக் கட்டமைப்பை தலைவிதியாக பண்படுத்தியதைப் போல், ஏற்றத்தாழ்வான கல்வி முறையையும் ஏற்கும்படி கட்டமைத்தது எது? முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மொத்தப் பள்ளிக் கல்வியும் அரசின் பொறுப்பில் இருந்ததை கணப்பொழுதில் மறந்தது போல் மறந்தது எங்கனம்?? ஜனநாயக நாட்டில் இலவச கட்டாய தரமான கல்வி என்பது அடிப்படை உரிமை என்பதை படித்தவர்கள் கூட மறந்து போனது எப்படி? இலவசமாக தரமான கல்வி நமது சட்டபூர்வ உரிமை. அதற்கு இவ்வளவு பெரிய  தொகையை ஏன் செலவு செய்ய வேண்டும்? என்னும் சிந்தனையைத் தூண்டாமல் அல்லது  கேள்வி எழுப்பாதபடி நம்மைக் கட்டுப்படுத்துவது எது? நாம் கற்றுக் கொண்ட கல்வி என்ன மாதிரியான கல்வி? பாவ்லோ பிரைரே கூறும் வங்கி முறைக் கல்விதானோ? வகுப்பறையில் பங்கேற்பாளனாக இல்லாமல் பார்வையாளர்களாக மாணவர்களை அமர வைத்திருந்த கல்விதான் முறையா? ஆசிரியருக்கு எல்லாம் தெரியும், மாணவனுக்கு எதுவும் தெரியாது என்று ஒன்றாம் வகுப்பு முதல் ல்லூரிக் கல்வி வரை பக்குவப்படுத்திவிட்ட கல்வி முறையா?  கல்வியில் ஒரு அரசியல் இருப்பதை ஆளுவோர் முதல் கல்வி வணிகத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் புரிந்துகொண்ட அளவிற்கு, மக்கள் புரிந்து கொள்ளாமல் போனதன் விளைவா?  சிந்திக்க வேண்டிய தருணம் எப்போதோ வந்துவிட்டது. சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையால் மக்கள் சிந்தனையால் ஒன்றிணையாமல் சிதறிக்கிடக்கின்றனர்.