Thursday, September 18, 2014

கல்வி என்றும் நடுநிலையானதல்ல

1 comments

170 மீட்டர் நீளம், 60 செண்டிமீட்டர் அகலம் கொண்ட கொடுஞ்சிறைக் கொட்டடியில் அந்த மனிதன் சிந்தித்து கொண்டிருந்தான். தான் பிறந்த நாட்டில் தன் குடிகளுக்கான எழுத்தறிவு இயக்கத்தில் 30 நாளில் சுமார் 500க்கும் அதிகமான கரும்பு விவசாயிகளுக்கு எழுத்தறிவித்ததுதான் அம்மனிதர் செய்த குற்றம். எழுத்தறிவித்ததற்காக நாடும் கடத்தப்பட்ட அம்மனிதர் பிரேசில் நாட்டு கல்வியாளர் பாவ்லோ பிரையரே. “இன்றைய கல்வி முறை எடுத்துக்கூறுதல் என்னும் நோயால் அவதியுறுகிறது? என்றவர். மூன்றாம் உலக நாடுகளில் மாற்றுக் கல்விக்கான தந்தை எனவும் இவர் புகழப்படும் இவரது கூற்று, இன்றும் உண்மையாக இருக்கிறது, வெளிவந்த சில ஆண்டுகளிலேயே 13 மறுபதிப்புகள், ஏழரை இலட்சம் பிரதிகள் என விற்றுத் தீர்ந்த இன்று பொன்விழாவை எட்டும் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை (PEDAGOGY OF THE OPPRESSED) என்னும் நூலாசிரியர். இந்நூல் மாற்றுக் கல்வி வேண்டுவோரின் வேத நூல் என்று வர்ணிக்கப்படுகிறது.


இன்றைய கல்வி முறையில் ஆசிரியர் பேசிக் கொண்டேயிருப்பார். மாணவர்கள் கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். ஆசிரியருக்கு எல்லாம் தெரியும். மாணவனுக்கு எதுவும் தெரியாது. ஆசிரியர் சிந்திப்பவர். மாணவர் சிந்திக்க வைக்கப்படுபவர். மாணவன் எதைச் சிந்திக்க வேண்டும் என்பதை ஆசிரியரே தீர்மானிப்பார். ஆசிரியர் தகவல் களஞ்சியம், அதனைத் தவணை முறையில் பெறக் கடமைப்பட்டவர் மாணவர். மாணவனின் சிந்தனைத் திறனுக்கும், படைப்பாற்றல் திறனுக்கும், கேள்வி கேட்கும் மனப்பாங்குக்கும் இன்றைய கல்வி முறை எதிரானது. உரையாடலுக்கு இடம் கொடாதது. இதனால் வகுப்பறைகளில் ஒரு மௌனம் குடிகொண்டிருக்கிறது. இந்த மௌனம் ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்துவிட்டது. ஒழுங்கின் வடிவமாகவும் உள்ளது. இவ்வாறு அமைந்துள்ள வகுப்பறைகளில் கொடுங்கோலாட்சியே நடைபெறும். இன்றைய கல்வி முறை “ வங்கி கல்வி முறை கல்வியாகஉள்ளதன் விளைவு இது என்கிறார் பாவ்லோ பிரையரே. வங்கியில் எவ்வளவு பணம் ஒருவர் வைத்திருக்கிறாரோ, அவ்வளவு பணமே அவர் எடுக்க முடியும். அது போல் ஆசிரியர், தான் சேகரித்து வைத்துள்ள தகவல்களை எடுத்துக் கூறுதல் மட்டுமே அவரது கடமை.  எந்த அளவு மாணவனுக்கு சென்று சேர்கிறது என்பதற்கு இதில் எந்த உத்தரவாதமும் இல்லை. மொத்தத்தில் இன்றைய கல்வி ஒரு ஒடுக்குமுறைக்கான கருவி”  என்றார் அவர்.

        இன்றைய கல்வி முறையின் மீது கடும் விமர்சன்ங்களை மட்டும் வைத்தவர் அல்ல, அவர். அதற்கு ஓர் மாற்றத்தையும் முன் வைத்தவர். அதற்காக கடுமையாக உழைத்தவர்; கள ஆய்வுகளையும் மேற்கொண்டவர். பிரேசில் நாட்டின் கல்வி கற்றிராத கரும்பு விவசாயிகளிடம், உரையாடல் வழியாக, சிந்திக்கத் தூண்டும் எழுத்தறிவினை எப்படிப் போதிப்பது என்றும் கண்டறிந்தார். தனது மாற்றுக் கல்வி முறைக்கு “பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறை (Critical pedagogy)”  என பெயரிட்டார்.


        பிரையரேவின் கல்வி முறையில் ஆசிரியர் மாணவர் உறவுமுறை கூட அடிப்படையிலேயே வேறுபடுகிறது. இக்கல்வித் திட்டத்தில் ஆசிரியர் பாடம் நடத்துபவராகவும், மாணவர் அதை கேட்பவராகவும் இருக்க முடியாது. மாறாக இருவரும் இணைந்து ஒரு பிரச்சனைக்கு தீர்வை தேடுவர். வகுப்பறைக்குள் எடுத்து இயம்புதல் என்பதற்கு பதிலாக, கலந்துரையாடல் நிகழும். இதில் ஆசிரியர் மாணவராகவும், மாணவர் ஆசிரியராகவும் இருப்பார். ஆசிரியர் தன்னைத்தானே 50 விழுக்காடு தற்கொலை செய்து கொண்டு, மாணவராக விளங்க வேண்டும். மாணவரும் 50 விழுக்காடு ஆசிரியராக இருக்க வேண்டும். ஆசிரியர் என்பவர் வெறும் ஆசிரியர் அல்ல, ஆசிரிய – மாணவர். அதே போல மாணவனும், மாணவ- ஆசிரியனே. இத்தகைய வகுப்பறயில் அதிகாரம் இற்று வீழவும், தோழமை கோலோச்சவும் காணலாம். கற்பித்தலும்-  கற்றலும் வேறு வேறு நிகழ்வாக இல்லாததையும் காணலாம். இத்தகைய வகுப்பறையில் மௌனக் கலாச்சாரம் இயல்பாக உடைபடும். மௌனக் கலாச்சாரம் நொருங்கும் இடத்திலிருந்தே கற்றல் தொடங்கும் என்கிறார் பாவ்லோ பிரையரே. மௌனக் கலாச்சாரம் உடைபடும் புள்ளியில்தான் வகுப்பறை சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும், அன்னியத்தன்மை, பயம் நீங்கவும் பெறும்.

பாவ்லோ பிரையரேவின் 15 ஆண்டு கடும் உழைப்பில் உருவான பிரச்சனை அடிப்படையிலான கல்வி முறைதான் உலக எழுத்தறிவு இயக்கத்திற்கு வித்திட்டது எனலாம். உலகின் பல நாடுகளின் எழுத்தறிவுக்கான சட்டங்கள் இயற்றப்படக் கூட இவரது ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்வி முறை நூல் அடிப்படையாக அமைந்தது. தமிழ்நாட்டில் அறிவொளி இயக்கம் பற்றிப் படரவும் கூட பாவ்லோ பிரையரேவின் கல்வி முறை பயன்பட்டது. எழுத்தறிவு அற்ற மக்களிடம், “பட்டா படி போன்ற எளிமையாக எழுதக் கூடிய, வாசிக்க கூடிய, அவர்களது வாழ்க்கையோடு ஒட்டிய விழிப்புணர்வை  தூண்டக்கூடிய வார்த்தை வடிவமைப்புகளுக்கு பிரையரேவே வெளிச்ச ரேகைகளைப் பாய்ச்சினார்.

நம்மில் பலரும், நமது கல்வி முறை நடுநிலையோடுதான் இருக்கிறது, ஆசிரியரும் நடுநிலையோடுதான் இருக்கிறார் என நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் “கற்றல் ஒரு அரசியல் செயல்பாடு. ஆசிரியர் நடுநிலையோடு இருக்க முடியாதுஎன ஓங்கி ஒலித்தவர். அதுமட்டுமல்லாது அறிதல் என்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான் என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவிற்கு ஒரு முறை வந்திருந்த அவரிடம் அதுபற்றிக் கேட்டபோது ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கினார். “ஒரு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கணக்குப் பாடத்தில் பயிற்சி அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்; உன் கையில் ரூ.100 இருக்கிறது. அதை வங்கிக் கணக்கில் போட்டு வைக்கிறாய். 3 சதவீத வட்டிக்கு 6 மாதம் வங்கியில் போட்டு வைத்தால், ஆறு மாதம் கழித்து எவ்வளவு பணம் கிடைக்கும்என்கிறார். இந்தக் கணக்கின் மூலம் முதலாளித்துவ பொருளாதார முறைமையையும் சேர்த்துத் தானே சொல்லித் தருகிறீர்கள் என கேட்டார். ஆசிரியர் ஒரு கலாச்சார செயல்பாட்டாளர் என்பதையும் வலியுறுத்தி “TEACHERS ARE CULTURAL WORKERS” என்ற நூல் ஒன்றையும் எழுதினார்.

எழுதுதல், வாசித்தல், மறுவாசிப்புச் செய்தல், எழுதியதை மீண்டும் திருத்தி எழுதுதல் என்பதற்கும் அதிக முக்கியத்துவம் அளித்தவர் பாவ்லோ பிரையரே. இன்றைக்கும் பலர் வகுப்பறையில் சிற்சில உரையாடல்கள் நிகழ்த்துவதையோ, நகைச்சுவையை அள்ளித் தெளிப்பதையோ, ஆரோக்கியமான உரையாடல் என நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மறுபுறம், பாவ்லோ பிரையரே சொன்ன வழி எனக் கூறிக்கொண்டும் இதே வழியான செயல்பாடுகளை அரங்கேற்றுகின்றனர். இவை இரண்டுமே பாவ்லோ பிரையரே முன்மொழியும் உரையாடல் வழிமுறையல்ல. ஒரு குறிப்பிட்ட பொருளை அல்லது பிரச்சனையை எடுத்துக் கொண்டு, ஆரோக்கியமான கலந்துரையாடல் வழியாக இலக்கு மாறாமல் அடுத்த அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் செல்வதே பிரையரே முன்வைக்கும் உரையாடல்.

தமிழ்நாட்டில் பாவ்லோ பிரையரேயும் அவரது கோட்பாடுகளையும் அறிந்திருப்போர் மிகவும் குறைவுதான். பாவ்லோ பிரையரேவின் கல்வி சிந்தனைகள் மனசாட்சி உள்ளோரைப் பிடித்து உலுக்குவன. சிலவற்றை ஆசிரியர் நினைத்தால் உடனடியாக நடைமுறைப் படுத்த முடியும். சிலவற்றை நடைமுறைப்படுத்த ஒத்த கருத்துள்ளோரிடம் விவாதம் தேவைப்படும். சிலவற்றை தற்போது இருக்கும் அரசாங்கங்களை நடைமுறைப்படுத்தலாம். சிலவற்றை அரசுகளும் கொள்கைகளும் மாறினாலே நடைமுறைப்படுத்த முடியும்.

பாவ்லோ பிரையரே வழியில் ஆரோக்கியமான உரையாடல் மூலம் வகுப்புகளை எப்படிக் உயிரோட்டமாக மாற்றுவது என்பதற்கு ஒரு பெரும் வழிகாட்டி நூல் பேரா.ச மாடசாமியின் “எனக்குரிய இடம் எங்கேஎன்னும் ஒரு நூல். தமிழாசிரியராக தனது வாழ்நாள் பயிற்சியின் அனுபவ சாரத்தை தொகுத்துக் கொடுத்துள்ளார். ஒவ்வொரு பாடத்திற்கும் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என பாடவாரியாக கூடி விவாதிக்க வேண்டும். கையேடுகள் தயார் செய்யப்பட வேண்டும். அல்லது இதில் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நடைமுறையை அமுல்படுத்தி வருபவர்கள் மாடசாமியைப் போல் எழுதத் தூண்ட வேண்டும்.


கல்வி முறையை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும் என்ற நோக்கில் இல்லாமல் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியை பல அமெரிக்க கல்வியாளர்கள் முன்னிறுத்தினர். ஆனால், அத்தகைய கல்வி முறை, விவாதம் மூலம் ஆட்சி அதிகாரத்தில் எந்தவித மாறுதலும் ஏற்படவில்லை. ஆனால் பாவ்லோ பிரையரே முன்மொழிந்த கல்வி முறை கல்வி சிந்தனைகள், விவாதங்கள் வழியே பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டுவரும் அரசியல் மாற்றங்களுக்கு பிரையரேவின் கல்விச் சிந்தனைகளும் கூட ஒரு காரணம் என்கிறார்கள். இயற்பியல் உலகை எப்படி ஐன்ஸ்டீனுக்கு முன், பின் என பிரித்தல் இயலுமோ, அவ்வாறே கல்வி சிந்தனைகளையும் பிரையரேவுக்கு முன், பின் என பிரிக்கலாம்.


கஞ்சி குடிப்பதற்கிலார், காரணம் இதுவென்னும் அறிவிலார் என்னும் நம் பாரதியின் ஏக்கப் பெருமூச்சிற்கு விடை காணும் அவரது புரட்சிகர கல்வி சிந்தனைகளை நடைமுறைக்கு கொண்டுவருதல் சாத்தியமா என அவரையே கேட்டபோது “நாம் நடந்து நடந்தே சாலை அமைத்துவிட முடியும்என பாவ்லோ பிரையரே கூறினார். எழுத்து என்பது அரசியல் திட்டம் சார்ந்த பணி” என்று வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்த பாவ்லோ பிரையரே பிறந்தது, 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 19.

Tuesday, September 9, 2014

அரசுப்பள்ளி மக்கள்பள்ளி, பாதுகாப்போம், பலப்படுத்துவோம். தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தொடக்கம்

0 comments
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளில் அறிவொளி இயக்கம், கற்றல் திறன் மேம்பாடு, ஆசிரியர்களுக்கான இணைசெயல்பாடுகள் உருவாக்குதல், சமச்சீர் பாடத்திட்ட நூல்கள் குறித்த ஆய்வுகள், போன்ற குறிப்பிடத்தகுந்த பணியை தமிழகத்தில் அடிப்படைக் கல்வியில் மேற்கொண்டுள்ளது.

தற்போதும் ஆசிரியர்களுக்கான பல்வேறுதிறன் மேம்பாட்டு பயிற்சிகள், ஆசிரியர் இணையம், வாசிப்பு இயக்கம் என தனது பணியை தொடர்ந்து நடத்தி வருகிறது. அரசின் கொள்கைகளாலும், புற்றீசல் போன்ற தனியார் பள்ளிகளின் வளர்ச்சியாலும் காமராஜர் கட்டமைத்த பொதுப்பள்ளி முறைமை என்னும் அரசுப்பள்ளி முறைமை முற்றிலும் செயல் இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. ஒரு நாட்டின் சமூக பொருளாதார அரசியல் நடவடிக்கைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமையவேண்டிய வலுவான அரசுப்பள்ளிகள் முற்றிலும் செயல் இழக்கும் நிலையில் உள்ளது. தன் கொள்கைகளாலும் தனியர்மயமாதலாலும் தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது என்பதை மறந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  மாணவர் சேர்க்கை குறைவாக  உள்ள ஆறு பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நிலைக்கு சென்றுள்ளது தமிழக அரசு .இத்தகைய போக்கு மேலும் மேலும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கவே பயன்படும். உலகமயமாக்கலுடன் ஒட்டிப் பிறந்த தனியார்மயத்திற்கு முன்பே தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகள் என்ற பெயரில் தனியார்மயம் தொடங்கிவிட்டது .கடந்த முப்பது ஆண்டுகளில் தனியார் பள்ளிகள் முற்றிலும் லாபத்தை முன்னிறுத்தும் வழியில் செயல்பட்டு, உண்மையான கல்வியியல், கற்றல் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டு, மதிப்பெண்களே கல்வி, அல்லது அதுவே தரம் என நிலைநிறுத்தி, தனியார் - அரசு என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாப் பள்ளிகளும் மதிப்பெண் பின்னால் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தொடக்க நடுநிலைப் பள்ளிகள் சில ஆயிரம் வரை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும், மூடப்படும் நிலையில் உள்ள கிராமங்களில் வாழும் ஏழைக் குழந்தைகள் மீண்டும் எழுத்தறிவு அற்ற ஒரு சமூகம் உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

             தாய் மொழி வழிக் கல்வியிலேயே கற்றல் மேம்பட்டு, படைப்பாற்றல் திறன், அத்துடன்  ஆங்கில மொழிப் புலமையும் அதிகரிக்க செய்ய முடியும் என்பதற்கு தமிழகமே மிகச்சிறந்த முன் உதாரணமாக விளங்கியது. சர் சி வி ராமன், ராமானுஜன், சிங்கரவேலர் எனத் தொடங்கி முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், மயில் சாமி அண்ணாதுரை என பல உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லமுடியும். ஆனால் ஆங்கிலம் கற்கவே அனைத்துப் பாடங்களையும் குருட்டு மனப்பாடம் செய்யும் நிலைக்கு தமிழகம் வந்துவிட்டது. மாணவர் சேர்க்கைக்காக ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்த பின்னர் இது பற்றியும் பேசியாக வேண்டும். எனவே தமிழக பள்ளிக் கல்வியை சீரழித்துள்ள அரசின் கொள்கைகள் தனியார் பள்ளிகளின் வணிகமயம், என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி தமிழக பள்ளிக் கல்வியை காக்கும் ஒரு பேரியக்கத்தை சர்வதேச எழுத்தறிவு தினமான 08.09.2014 ன்று தொடங்கியது.

இந்த இயக்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அரசுப் பள்ளி மக்கள் பள்ளி. பாதுகாப்போம். பலப்படுத்துவோம்" என்னும் பெயரைச் சூட்டி உள்ளது. தமிழக மக்களிடம் இச்செய்தியை கொண்டு சேர்க்க ஐந்து பிரசுரங்களை வெளியிட உள்ளோம்மேலும் அரசுப் பள்ளிகளை காக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிட வேண்டும், தனித்தனி வகுப்பறைகள். வகுப்பிற்கொரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். சுத்தமான குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்திட வேண்டும், செயல்வழிக்கற்றல், தொடர்மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்த வேண்டும். நலத்திட்ட உதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடவும், கல்வியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்திட வேண்டும். உண்மையான சமச்சீர் கல்விமுறையினை அமல்படுத்திட வேண்டும், மத்திய அரசின்அரசு தனியார் கூட்டுமாதிரிப் பள்ளித்திட்டத்தை நிரந்தரமாக நிராகரிதத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி  பத்து லட்சம் கையெழுத்துக்களை பெற்று அரசுக்கு சமர்பிக்க உள்ளோம். அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க  அனைத்து தரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், ஆசிரியர், மக்கள் பங்கேற்பை உறுதி செய்திடவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல்கட்சிகளும் அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக இணைக்க வேண்டும் என்பதும் இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.

இவ்வியக்கத்திற்கு வலு சேர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் என இக் கொள்கைக்கு உடன்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி செயலாற்ற திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்களில் கையெழுத்து இயக்கம், நூல்விற்பனை கருத்தரங்குகள், மண்டல மாநாடுகள் எனத் தொடர்ந்து கொண்டே இருக்கும். அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அரசுப் பள்ளி அவலத்திற்கு காரணமானவற்றை கண்டறிய கள ஆய்வுகள் நான்கு தலைப்புகளில் நடத்தப்படும். டிசம்பர் மாதத்தில் ஆய்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும் அரசுக்கு சமர்ப்பிப்பது. அதனை நடைமுறைப்படுத்தக் கோருவது, அதனை வீதி நாடகங்கள், பாடல்கள் உள்ளிட்ட கலைப்பயணம் வழியாகவும் மாநிலம் முழுக்க எடுத்துச் செல்வது என இந்தப் பிரச்சார இயக்கத்தில் திடமிடப்பட்டுள்ளது.


அதில் முதல் கட்டமாக பேரா.நா.மணி எழுதியமீண்டெழும் அரசு பள்ளிகள்’ என்னும் நூலை பேரா.வசந்தி தேவி வெளியிட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அருமைநாதன் பெற்றுக்கொண்டார். ’இவைகளா கனவுப் பள்ளிகள்’ என்னும் தலைப்பில் வணிக மய பள்ளிகளின் செயல்பாட்டை விமர்சித்து பேரா. ராஜமாணிக்கம் எழுதிய நூலை முனைவர். ச. முத்துகுமரன் முன்னாள் துணைவேந்தர் வெளியிட இந்திய மாணவர் சங்க மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்பத்து லட்சம் கையெழுத்து பெரும் இயக்கத்தை பேரா...அறவாணன் துவக்கி வைத்தார். இந்த மாநில அளவிலான பிரச்சார துவக்கவிழா நிகழ்வில்  இவ்வியக்கத்தின் மாநில தலைவர் மணி, மாநில ஒருங்கிணைப்பாளர் தேனி.சுந்தர், மாநில நிர்வாகிகள் உதயன், சி. இராமலிங்கம், சென்னை மாவட்ட அறிவியல் இயக்க செயலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை  சென்னை மாவட்ட அறிவியல் இயக்க குழுவினர் செய்திருந்தனர்.