Monday, September 1, 2014

பொம்மலாட்டத்தின் வழியே அறிவியல், சமூக அறிவியல், தமிழ் ஆங்கிலம்.....

மீண்டெழும் அரசுப் பள்ளிகள்....3

குழந்தைகளைக் கொண்டாடுவோம் நூலைப் படித்த பிறகு, முதல் வகுப்புக்கு வரும் குழந்தைகள் உற்சாகம் பொங்க பள்ளி வகுப்பறைகளை எதிர்கொள்வார்களோ அதுபோல என்றைக்கு குழந்தைகளுக்கு வாய்க்கும் என பலநாள் விவாதித்திருக்கிறோம். நடைமுறைப்படுத்துவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டும் என திட்டமிட்டிருக்கிறோம். ஆனால், ஆண்டு முழுவதும் உற்சாகம் நுரை பொங்கும் வகுப்பறையை முதல் முறையாக தரிசித்துவிட்டேன். கார்டூன் டிவி நிகழ்ச்சிகள் குழந்தைகளைப் பாடாய்ப்படுத்துகிறது. எப்பப் பார்த்தாலும் இந்த பொம்மையப் போட்டுக்கிட்டு, யாரையும் ஒன்னையும் பார்க்க விடமாட்டேங்குகிறாங்க என புலம்பல்கள் பல வீடுகளின் சுவர்களில் கசிய கேட்கலாம். ஆசை, ஆசையாய் பார்க்கும் குழந்தைகளின் கனவு பொம்மைகள் வழியே பாடம் நடத்தினால் என்ன என்று ஒரு ஆசிரியர் மனதில் உதித்த சிந்தனை, கணிதம் தவிர எல்லாப் பாடங்களையும் பொம்மலாட்டம் வழியாக கற்பிக்கும் அளவிற்கு அவரை முன்னேற்றியுள்ளது.

       பொம்மலாட்டம் வழியாக தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் உள்ள கதைகள், குழுவிவாதம், நாடகம், பட்டிமன்றம் சார்ந்த விஷயங்களை இந்த பொம்மலாட்டம் வழியாக கற்றுத் தருகிறார், ஆசிரியர் தாமஸ் அந்தோனி.  எங்கே பயமும், சுதந்திரமின்மையும் இருக்கிறதோ அங்கே உண்மையாக கற்றல் நடைபெறாதுஎன பல காலமாக கல்வியாளர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால் பயமுறுத்தல் வழியாக கற்பிக்கப்பட்டு வருகிறது. இது ஒரு முரண். இந்த கல்வியாளர்கள் கூற்றுக்கு தாமஸ் அந்தோனியின் பொம்மலாட்டத்தில் விடை இருக்கிறது. பொம்மலாட்டத்தின் போது ஆசிரியர் என்னும் அச்சுற்றுத்தல் உருவம் முதலில் திரைக்குப் பின்னால் போய்விடுகிறார். 

     அக்குழந்தைகள் விரும்பும் பொம்மைகளே அவர்களிடம் பேசுகிறது. பொம்மைகளே கேள்வி கேட்கிறது. பதில் தவறாக இருந்தாலும் உற்சாகத்துடன் பெரும் குரலெடுத்து குழந்தைகள் பதில் சொல்கிறார்கள். இந்த வகை கற்றலில் சலிப்பே ஏற்படுவதில்லை. பாடத்தை கவனிக்கவில்லை, இங்கே கவனி, அங்கே என்ன பார்வைஎன்ற அலறல்களுக்கு அங்கு இடமில்லை. பொம்மலாட்டத்தோடு குழந்தைகள் இரண்டறக் கலந்துவிட, முடிவில் கற்றலும் நடைபெற்று விடுகிறது. பொம்மலாட்டத்தின் போது குரலை மாற்றி அந்தோனி ஆசிரியர் பேசும் போது கார்டூன் சேனல் பார்ப்பது போன்ற உணர்வே விஞ்சி நிற்கிறது. வாரத்தில் இரண்டு நாள் மட்டுமே அந்தோணி இவ்வகையில் பாடம் நடத்துகிறார். அந்த இரண்டு நாட்களும் எப்போது என குழதைகளுக்கு தெரியாது. எனவே 5 நாட்களும் குழந்தைகள் தவறாமல் ஆஜர். 

         ஒரு பாடத்தை பொம்மலாட்டம் வழியாக நடத்தி முடிக்கும் போது அந்தப் பாடம் மட்டுமே நெஞ்சில் நிற்பதில்லை. நிறைய புதிய வார்த்தைகளும் கற்கின்றனர் அந்தக் குழந்தைகள். இதன் மூலம், குழந்தைகளின் எழுதும் திறன், படிக்கும் திறனும் நிச்சயமாய் கூடியிருக்கிறது என கூறுகிறார் அந்தோணி ஆசிரியர். இந்த ஜூன் மாதம் முதல்தான் இந்த புதிய முறையை அவர் வடிவமைத்து நடத்தி வருகிறார். பல அச்சு மின்னணு ஊடகங்களின் கவனத்தை இம்முயற்சிகள் ஈர்த்துள்ளது. ஒரு சில ஆசிரியர்களும் கூட வந்துபார்த்து, முயற்சிப்பதாக சொல்லிச் சென்றுள்ளனராம்.

 ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள நாதக்கவுண்டன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு இப்புதிய வழி கற்றல் மட்டுமல்ல பெருமையாக இன்னும் சிலவும் உண்டு. சமீப ஆண்டுகளாக சேர்க்கை அதிகரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 46ஆக இருந்தது; தற்போது அதிகரித்து வருகிறது. பள்ளியில் சேரும் ஒவ்வொரு குழந்தைக்கும் இப்பள்ளியின் கிராமக் கல்வி குழு ரூபாய் 500 ரொக்கப் பரிசும் கொடுத்து சிறப்பித்துள்ளது. அடுத்த ஆண்டு இப்பரிசு ரூ.1000/- என உயரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார்கள். ஒவ்வொரு ஆசிரியரும் குழந்தைகளிடம் தனிகவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். பள்ளி வளாகம், ஆசிரியர்களின் ஈடுபாடு, ஊர் பொதுமக்கள் ஈடுபாடு என எல்லாமும் தொடர்ந்து இணைந்து பயணிக்கையில் இப்பள்ளியின் எதிர்காலத்தில் பெருவெற்றி சாத்தியப்படும் என நம்புவோம். 

0 comments:

Post a Comment