Monday, June 16, 2014

பொழுதெல்லாம் எங்கள் செல்வம்…


        ஊழல் என்றாலே ஒரு இலட்சம் கோடிக்கு மேல் என்பது மரபாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படத் துவங்கிவிட்டது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, இயற்கை எரிவாயு விலை நிர்ணயம், என எல்லாம் ஒரு இலட்சம் கோடிக்கும் மேலானவை. தற்போது வெளிவரும் ஒவ்வொரு ஊழலும் இதுவரை நடந்த ஊழல்களின் ஒட்டுமொத்த தொகைக்கும் மேலானவை. தமிழ்நாட்டின் கிரானைட் மோசடியும், தாதுமணல் சமாச்சாரங்களும் ஆயிரக்கணக்கான கோடிபெறுமானவை. ஆந்திர, கர்நாடக அரசுகளையும், அரசியல் கட்சிகளையும் ஆட்டிப்படைக்கும் சர்வ வல்லமை படைத்த ரெட்டி சகோதரர்களின் வருமானமும், அதையொட்டிய ஊழல்களும் இலட்சம் கோடிகளைத் தாண்டுபவை. இந்த எல்லா ஊழல்களுக்கும் ஒரு பொது தன்மை உண்டு. நிலம், நீர், வனம், கடல், கனிம ஆற்றல், அலைக்கற்றை என்று முழுக்க முழுக்க இயற்கை வளங்களின் மேலாண்மையில் நடந்த ஊழல்களாகும். இயற்கை வளங்களில் இவ்வளவு பெரிய ஊழல்கள், முறைகேடுகள் சுதந்திர இந்திய வரலாற்றில் நடைபெற்றது இல்லை. இத்தகைய ஊழல் முறைகேடுகள் கடந்த இரு பத்தாண்டுகளாகத்தான் நிகழ்கிறது. உலகமயமாக்கலின் பின்னணியும் இந்த ஊழல்களுக்கு காரணம். நாட்டின் இயற்கை வள மேலாண்மைக்கும் புதிய பொருளாதாரக் கொள்கைக்கும் இந்த ஊழல் முறைகேடுகளுக்கும் தொடர்பு உண்டு. இந்த காலகட்டத்தில் தான் “குன்றா வளர்ச்சி” (Sustainable development) ன்ற சொல்லாடல் அதிகம் புழக்கத்திற்கு வந்தது நினைவிருக்கலாம். குன்றா வளர்ச்சிக்குத் தேவையான இயற்கை வளங்களை சூறையாடிவிட்டு, எந்த வகையான குன்றா வளர்ச்சியை கொண்டு வந்து சேர்ப்பார்களோ தெரியவில்லை. ஒரு வேளை குன்றா வளர்ச்சி என்ற சொல்லை நாம்தான் தவறாக புரிந்து கொண்டோமா என்றும் தெரியவில்லை. தனிநபர்களின் குன்றா வளர்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டுக்கானது என நாமாகவே கற்பனை செய்து கொண்டோமோ?

       மனித சமூக வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் ஆக்கிரமிப்புகள், காலனியாக்கம், தொடர்ச்சியான யுத்தங்கள் போன்றவை இயற்கை வளங்களை தனதாக்கி கொள்ள நிகழ்ந்துள்ளதை உணர முடியும். கடந்த காலத்தில் மட்டுமல்ல, ஈராக் உட்பட எண்ணை வளம் மற்றும் இயற்கை வளம் நிறைந்த நாடுகளின் மீதான யுத்தங்கள், அந்நாடுகளில் தூண்டிவிடப்படும் உள்நாட்டுக் கலவரங்கள், பல நாடுகளில் ஜனநாயகத்தின் பெயரால் உருவப்படும் கொலைவாள்கள், வீசப்படும் குண்டுகள், இயற்கை வளங்களைக் கைப்பற்றவே நிகழ்ந்து வருகிறது. ஒரு பொருளை உற்பத்தி செய்ய ஆதார சுருதியாக விளங்குவதே இயற்கை வளமும் மனித உழைப்புமே. இயற்கை வளங்களை இலாப வெறிக்காக சீரழித்துவிட்டு, ஆட்சியாளர்களின் சுயநலத்திற்கு காவு கொடுத்துவிட்டு, எப்படி மனித சமூகம் குன்றா வளர்ச்சி ஈட்டப்போகிறது?

       படிப்பறிவு இல்லா மக்கள் கூட பூமிக்கு கீழே இருப்பதெல்லாம் அரசுக்கு சொந்தம் அல்லது நாட்டுக்கு சொந்தம் எனப் பக்குவப்பட்டிருந்தனர். ஆதிவாசி மக்கள் இன்றளவும் இயற்கையோடு இயைந்தே வாழ்கிறார்கள். கையளவுக்கு மேலான குச்சியை வெட்டி வீடு கட்டிக்கொண்டதில்லை. விலங்குகள் கருத்தரிக்கும் காலத்தில் வேட்டையாடப் போதில்லை. இதன் பெயர் தான் உண்மையான குன்றா வளர்ச்சி. நீர், நிலம், காற்று, வனவளங்கள், கனிம வளங்கள் எல்லாம் முன்பு பொதுவில் இருந்தது. வானம் பொழிகிறது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இயற்கை அன்னை அதன் பிள்ளைகளுக்கு அமுதூட்டுகிறாள். அனைவரும் பகிர்ந்து உண்போம் என்ற அறிவை நாகரிக சமூகம் ஊட்டியிருந்தால் காவிரியாறும் முல்லைப் பெரியாறும் தீரா பிரச்சனைகளாக மாறியிருக்காது. நமது தனியுடமை சிந்தனை வளர்ந்து நாளாவட்டத்தில் பிறர் சொத்துக்களையும் தன் சொத்தாக பாவிக்கும்படி செய்துவிட்டது. இயற்கை வளங்களையும் அவரவர் ஆதிக்க சக்திக்கு தக்கவாறு தனதாக்கிக் கொள்ள வேண்டுமென்ற வெறி உள்ளூர் மட்டத்திலும் நாடுகளுக்கு இடையேயும் பெருகிக் கொண்டிருக்கிறது. உடமை என்பது பண்டம், சொத்து எனக்கருதியதன் விளைவு இயற்கை வளங்களின் பண மதிப்பை மட்டுமே கருத்தில் கொள்ளும்படியும் செய்துவிட்டது. நிலமோ, வனமோ, நீரோ, பல்லுயிரியமோ, கனிம வளமோ பணமாகவே கண்ணுக்குத் தெரிகிறது. இயற்கை வளங்களை மதிப்பிடும் பொழுது இதன் சந்தை மதிப்பையே உண்மையான மதிப்பாகக் கொள்கிறோம். இயற்கை வளங்களின் பல்வேறு பயன்கள் கண்களுக்கு தெரிவதில்லை. வனவளம் என்று எடுத்துக் கொண்டால் அதில் இருக்கும் மரங்களின் சந்தைப் பண மதிப்பை வனவளம் என்கிறோம். சூழல் இயலைப் பாதுகாப்பதில், பல்லுயிரியம் காப்பதில் அதன் பங்களிப்பு, பருவகால மாற்றத்தை தடுப்பதில் அதன் பாத்திரம், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்துவதில் அதன் பங்கு, வரும் ஏழு ஏழு தலைமுறைக்கு அதன் முக்கியத்துவம் எல்லாம் மறக்கடிக்கப்பட்டுவிட்டது. முதலில் நிலத்தின் வழியாகவும், பின்னர் சாதிகள் வழியாகவும் மேலாதிக்கம் பெற்று, அரசியல் ஆதிக்கம் பெற்றவர்கள் நிரம்பிய நம் நாட்டில், இந்தப் போக்கு அதிகமாகவே இருக்கிறது. ஒவ்வொரு முறை இயற்கை வளங்கள் அழிக்கப்படும் போதும், அது பண்டமாக மாற்றப்படும் பொழுதும் தேசிய வருவாயாக கணக்கிடப்படுகிறது. இது மிக மிக ஆபத்தானது. நாம் கூறி வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தி(GDP) வளர்ச்சி கூட இயற்கை வளங்களை அழித்து வருவதன் ஒரு பகுதி என்பதையும் கவனிக்க வேண்டும்.

       இயற்கை வள மேலாண்மை அல்லது ஆளுகையில் உள்ள மற்றுமொரு சவால், குறுகிய கால தேவைகளுக்காகவும், நீண்ட கால நலன்களுக்காகவும் இயற்கையை எப்படி பயன்படுத்துவது என்பதே. எதிர்கால சந்ததியினருக்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று இருக்கும் பேராவல், இயற்கை வளங்களை விட்டுவைக்க வேண்டும் என்பதில் இல்லை. இயற்கை வளங்கள் இல்லாத நிர்வாண பூமியில்  இவர்களது காகித பணம் என்ன விதமான வாழ்க்கையை தன் சந்ததியினருக்கு வழங்கும் என்றா சிந்தனை கணப்பொழுது கூட தோன்றி மறைவதாக தெரியவில்லை. வளர்ச்சிக்காக காடுகள் அழிக்கப்படும் பொழுதும், அணைகளைக் கட்டும்பொழுதும், குறுகிய கால தேவைகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. நீண்ட கால நலன், அல்லது உண்மையான குன்றா வளர்ச்சி குறித்து அக்கறை கொள்வதில்லை. தற்போது தீவிர விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை மீதான மாதவ் காட்கில் மற்றும் கஸ்தூரிரங்கன் அறிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களில் குறுகிய கால தேவைகள் அதிகமாகவும் நீண்ட கால நலன்கள் குறைவாகவுமே பிரதிபலிக்கிறது.

       விவசாயம், கால்நடைகள், வனவளம், மீன் வளம், கனிம வளம், ஆற்றல் வளங்களின் நிர்வாகம் மத்திய மாநில அரசுகளால் தனித்தனியாக மேற்கொள்ளப்படுகிறது. இத்துறைகள் அடிப்படையில் இயற்கை வளம் சார்ந்தவை என்றாலும், ஆனால் இவற்றை நிர்வகிப்பதற்கான அரசின் கொள்கைகள் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றும் ஒருங்கிணைப்பு இன்றியும் உருவாக்கப்படுகிறது. இதனால், ஒரு துறையின் வளர்ச்சி மற்றொரு துறையின் வீழ்ச்சிக்கு பல நேரங்களில் காரணமாகிவிடுகிறது. இவற்றுக்குள் ஒரு ஒருங்கிணைப்பு தேவை என்ற புரிதல் இதுகாரும் ஆட்சியாளர்களுக்கு உருவாகவில்லை. கொள்கை முடிவுகளில் கோட்டைவிட்டுவிட்டு, “கொள்கை முடிவுகளால் சொத்துக் கொள்ளை போனால் நிர்வாகம் பொறுப்பல்ல” எனக் கைவிரிக்கிறார் நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங். குன்றா வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்தான் தேசிய சர்வதேசிய அளவில் இயற்கை வளங்களை கைக் கொள்ளும் போட்டி அதிகரித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் மீதான பேரழிவு யுத்தங்கள் இயற்கை வளங்களை மையப்படுத்தியே. உணவுக்காக என்று கூறிக் கொண்டு ஆண்டு ஒன்றுக்கு 5.6 மில்லியன் ஹெக்டேர் காடுகள் உலகம் முழுவதும் அழிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் விவசாயம் கட்டுப்படியாகவில்லை எனக் கூறி ஏராளமான விளை நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்படுகிறது.

       உலகமயத்திற்கு பிந்தைய காலகட்டத்தில், உருவாக்கப்பட்ட இந்திய அரசின் இயற்கை வள ஆளுகைக் கொள்கைகள் பல இலட்சம் கோடி ரூபாய் முறை கேடுகளுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிட்டது.. இந்த ஊழல்களின் பிறப்பிடமே அரசின் கொள்கைகள் என்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும் இல்லாமல் இயல்பாகவே போய்விட்டது. இந்தக் கொள்கைகள் தொடரும் வரை இதைவிடவும் கூடுதலான இயற்கை வளங்கள் கொள்ளை போகும். இயற்கை வளங்களின் பயன்பாட்டு திறனை அதிகரிக்கிறோம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள உள்நாட்டு, வெளிநாட்டு, பன்னாட்டு கம்பெனிகளின் பொது தனியார் கூட்டுத் திட்டங்கள் (PPP) இந்த நிறுவனங்களின் இலாப விகித்தை அதிகரித்ததேயன்றி, பயன்பாட்டு திறனை அதிகரிக்கவில்லை. எனவே தான் சிறு கனிம வளங்களைக் காக்கக் கூட உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டியுள்ளது; கண்டிக்க வேண்டியுள்ளது. இலட்சம் கோடிக்கு மேலான இயற்கை வள மோசடிகள் அனைத்துமே உச்சநீதிமன்ற தலையீட்டால் மட்டுமே உயிர்பெற்றது. அரசின் கொள்கையே இந்த ஊழல்முறை கேட்டிற்கு அடிநாதம் என்பதால் மேற்படி வழக்குகளின்  மீதான தீர்ப்பு எப்படி அமையும் என்பது கூட கேள்விக்குறியே?

       இயற்கை வளங்கள் காலாகாலத்திற்குமாக நீடித்து நிலைபெற வேண்டியன என்ற எண்ணம் மக்கள் மனங்களில் விதைக்கப்பட வேண்டும். மறைந்த குன்றக்குடி அடிகளார் தனது இறுதிக் காலங்களில் “பெருமாள் கோயில் சுண்டலின் மீது உள்ள பற்று, நாட்டின் சொத்துக்கள் கொள்ளை போவது கண்டு ஏற்படவில்லையே” என மேடைதோறும் கூறி வருந்தினார். இயற்கை வளங்களை பாதுகாப்பதற்கான பொறுப்பு ஆளும் அரசுகளுக்கு மட்டுமல்ல, உள்ளூர் மக்கள் தொடங்கி சகலருக்கும் இருக்க வேண்டும். இந்த பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் உணர்வு நிலை உருவாக்கப்பட வேண்டியிருக்கிறது. மக்களின் உணர்வு மட்ட மாற்றம், உள்ளாட்சி தொடங்கி பாராளுமன்றம் வரை அதிர்வுகளை உருவாக்க வல்லது, மாற்றங்களை கொண்டுவரவும் வல்லது, இயற்கை வளங்கள் வெறும் பணப் பயன் மிக்க பண்டமாக கருதப்படும் நிலையும் அழிந்தொழிய வேண்டும். இயற்கை வள ஆளுகைத் திறனின் மையப்புள்ளியே வெளிப்படைத் தன்மையும், பொறுப்புணர்ச்சியுமே. பெரும் நிறுவனங்களின்  முதலீட்டாளரின் நலன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இருக்கும் சகல் தகிடுதத்தங்களும் கைவிடப்படுதல் அவசியம். முதலீட்டாளரின் நலனுக்காக காவு கொடுக்கப்படும் வெளிப்படைத் தன்மை சமூகக்கடப்பாடு, மக்கள் நலனை, நீர்த்துப் போகச் செய்யும் சட்டங்கள் போன்ற செயல்பாடுகள் கைவிடப்படல் அவசியம். இந்திய தேசத்தின் இயற்கை வளப் பயன்பாட்டு சிக்கல் பற்றாக்குறை சார்ந்தது அல்ல. ஆளுகை, அணுகுமுறை சார்ந்தது. அரசியல் நிலைபாடு சார்ந்தது. நாம் அமைக்கும் தொழிற்சாலைகள் நமது பெரும்பான்மை தேவைகளை ஒட்டி அமையவேண்டுமேயன்றி இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு அமையக்கூடாது. என்ன மாதிரியான தொழில்நுட்பத் தேர்வு, என்ன மாதிரியான பொருளாதார வளர்ச்சி என்பதெல்லாம் யாருக்கான அல்லது எந்தப் பகுதி மக்களுக்கான வளர்ச்சி என்ற அரசியல் தேர்வில் உருவாகுகிறது. இயற்கை அன்னையின் அருட்கொடையே இயற்கை வளங்கள் என்ற சிந்தையில் கூட மாறுதல் தேவைப்படுகிறது. அருட்கொடை என கருதியதின் விளைவே, அதன் மதிப்பினை உணராமல் போனோம்.  எல்லோருடைய தேவைக்கேற்ற வளங்களும் இந்த மண்ணில் நிரம்பி இருக்கிறது. ஆனால் யாருடைய தனிப்பட்ட பேராசையையும் பூர்த்தி செய்ய போதுமானதல்லஎன்றார் மகாத்மா காந்தி. இந்த வார்த்தைகள் எக்காலத்தும் குன்றாப் பொருளுடையது. இதனை உணர்ந்து செயல்பட இன்னமும் காலம் இருக்கிறது. வளங்கள் முற்றிலும் தூர்ந்து போனபின் சிந்திக்க தொடங்கினால் கண் கெட்ட சூரிய நமஸ்காரம் தானே?


      

       

0 comments:

Post a Comment