Tuesday, August 19, 2014

பொதுப்பள்ளிக்கான பாதை…………………2


 இடம் : மாநகராட்சி துவக்கப் பள்ளி, தந்தை பெரியார் வீதி, ஈரோடு

      அதுவொரு நகராட்சி துவக்கப்பள்ளி. ஐந்தாம் வகுப்புவரை உள்ள இப்பள்ளியில் 235 மாணவர்கள் படிக்கிறார்கள். ஏழு உதவி ஆசிரியர்கள், ஒரு தலைமை ஆசிரியர் என அப்பள்ளியில் எட்டு பேர் பணியாற்றுகின்றனர். முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பில் தலா இரண்டு பிரிவுகள் உண்டு. தந்தை பெரியார் பிறந்த வீட்டின் அருகே, அவரது பெயரையே தாங்கி நிற்கும் சாலையில் அமைந்துள்ள பள்ளி. 2009ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முத்துராமசாமி என்பவர் தலைமை ஆசிரியராக இப்பள்ளிக்கு மாற்றலாகி வரும் வரை பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 72 மட்டுமே. நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்குக்கு மேல் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எப்படி சாத்தியம் இது?

235 குழந்தைகளின் பெற்றோரது முகவரியும் அலைபேசி எண்ணும் தலைமை ஆசிரியரின் உள்ளங்கையிலே உள்ளது. தினமும் காலையில் வருகைப்பதிவு சரிபார்க்கப்படும். பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோருக்குத் தகவல் தெரிவித்து, ஏன் வரவில்லை? நாளைக்கு நேரமே அனுப்பி வையுங்கள் என்று கேட்டுக் கொள்கிறார்கள். அசாத்தியமான விசயம் வாரம் ஒரு கருத்துரை. ஆம். வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை யாரேனும் ஒருவரை வெளியில் இருந்து அழைத்து வந்து கருத்துரை நிகழ்த்த வைக்கிறார்கள். யார் அவர்கள்? மருத்துவர்கள், ஜேசீஸ் அமைப்பினர், ரோட்டரி அமைப்பினர், அரசு அலுவலர்கள் என பல முகங்கள். பல தலைப்புகளில் தொடர் செய்திப் பரிமாற்றம் நடக்கிறது. ஆண்டுதோறும் குறைந்த கட்டணத்தில் கல்வி சுற்றுலா.

ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்து ஒவ்வொரு ஆண்டும் ஆண்டு விழா. ஒரு லட்சம் என்பது நமக்குத் தான் பெரிதாகத் தெரிகிறது. "சார், இதெல்லாம் பெரிய விசயம் இல்லை. எல்லாமே sponsorrshipதான். யாரிடமும் பணம் கேட்பதில்லை. பரிசுப் பொருட்கள், மேடை அமைப்பு, அலங்காரம், மைக்செட், சீரியல் செட், நோட்டீஸ் என அனைத்தும் பேசி ஒப்படைத்து விடுவேன்." என்கிறார். பத்து வயதுக்கு உட்பட்ட சிறு குழந்தைகள் என்றாலும் அவர்கள் வயதுக்கு ஏற்ற போட்டிகள் எங்கு நடந்தாலும் கூட்டிச் சென்று பங்கேற்கச் செய்கிறார்கள்.

      மாணவர் சேர்க்கைக்கு பிரச்சாரம் ஏதேனும் செய்வீர்களா? என்று கேட்டவுடன், ஏன் இல்லை? எங்கள் பள்ளி ஆசிரியர்கலூகு மே மாத கோடை விடுமுறை ஒரு வாரம் மட்டுமே. மே மாதம் முதல் வாரம் மட்டுமே விடுமுறை எடுத்துக் கொள்வோம். மீதம் இருக்கும் எல்லா நாட்களும் காலை ஏழு மணி முதல் காலை பத்து மணி வரையிலும், மாலை ஐந்து மணி முதல் ஏழு மணி வரையிலும் வீடு வீடாகச் சென்று பெற்றோரிடம் பேசுவோம். எங்கள் பள்ளியில் ஆண்டு முழுவதும் செய்துவரும் செயல்பாடுகளில் முக்கியமான சிலவற்றின் போட்டோக்களை மல்ட்டி கலரில் அச்சடித்து விநியோகம் செய்வோம்.

அந்த வீட்டின் குழந்தை பெரிய ஆங்கில வழிப் பள்ளிக்குச் சென்றாலும் சரி, குழந்தைகளே இல்லை என்றாலும் சரி, நோட்டீஸ் கொடுப்போம். நின்று பேசுவோம். எங்கள் பள்ளியின் சிறப்புகளை எடுத்துக் கூறுவோம்.
 
    இது ஒரு நகர்ப்புற நகராட்சிப் பள்ளி. நகர்ப்புறத்தில் சுற்றிலும் உள்ள, அரசுப் பள்ளி நலனில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும்  ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் கொடுக்கிறார்கள். பள்ளி நிகழ்ச்சிக்கு வரும்படி விரும்பி அழைக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் பெரும்பாலான நிகழ்ச்சிக்கு வருவதில்லை. ஆனால் வாஞ்சையுடன் பள்ளியில் நடக்கும் ஏதேனும் ஒரு நிகழ்ச்சிக்கு நன்கொடை வழங்குகிறார்கள். பள்ளி வளர்ச்சிக்கு அனுசரனையாக இருக்கிறார்கள். தொடர்ந்து புதிய புதிய நிகழ்ச்சிகள் இணைக்ப்படுகிறது. தற்போது, சிலம்பாட்டம் சொல்லித்தர மாதம் ரூபாய் ஆயிரத்திற்கு மாஸ்டர் ஒருவர் அமர்த்தப்பட்டுள்ளார். பெரிய தனியார் மருத்துவமனை ஒன்று தினமும் வந்து போக யோகா சொல்லித்தருகிறார்கள். தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் இருந்து 75 குழந்தைகள் இப்பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளனர். இந்தப் பள்ளியில் நடக்கும் சில நிகழ்ச்சிகளுக்கு ஈரோடு நகரத்தின் பகுதிகளில் விளம்பரத் தட்டிகள் பெரிது பெரிதாக இப்பள்ளியில் இருந்து வைத்திருப்பதை பல நேரங்களில் கண்டிருக்கிறேன்.

இந்தப் பள்ளியின் விளம்பரத் தட்டியிலும், நோட்டீசிலும் ஒரு நுட்பமான விசயத்தைப் பார்க்கலாம். இந்த விளம்பரங்களில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் பெயரும் இருக்கும்.அந்தப் பெயர்களுக்கு  நேரே அவர்களது பட்டப் படிப்புகளும் இடம்பெற்று இருக்கும். அத விளம்பரத்தைப் பார்க்கும் மக்களுக்கு, அடேயப்பா இவ்வளவு படிப்பு படித்தவர்கள் இந்தப் பள்ளியில் பணியாற்றுகிறார்களா? என்ற எண்ணத்தை இயல்பாகவே உருவாக்கும்.
     
 சக ஆசிரியர்களையும் இதில் முழு மனதுடன் இணைத்து எடுத்துச் செல்கிறார், இதன் தலைமை ஆசிரியர். அவர்களுக்கு வேண்டிய ஒத்துழைப்பை நல்குகிறார். உறுதுணையாக இருக்கிறார், தலைமை ஆசிரியர்.
   
   இறுதியாக அவரிடம் ஒரு கேள்வி கேட்கத் தோன்றியது." எப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியது?" என்று கேட்டேன். எனக்கு உண்மையான முதலாளிகள் என் குழந்தைகள் தான். இந்த உண்மையான முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பதே என் வேலை. இங்கு நான் பணி செய்யும் பள்ளியை கவனிக்காமல், பாழ்ப்படுத்தி விட்டு, அடுத்தப் பள்ளிக்குப் பணிநிரவல் என்ற பெயரில், பணி மாறுதலில் சென்றால் இந்தப் பள்ளியையும் கெடுத்து, அந்தப் பள்ளியையும் கெடுக்கிறோம் என்று பொருள் என்றார். எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியரிடமும் இந்த அர்பணிப்பு உணர்வு இருந்தால் அரசுப் பள்ளிச் சேர்க்கைக்கான ஒரு பகுதியைச் சரி செய்துவிடலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

0 comments:

Post a Comment