Friday, August 22, 2014

பொதுப்பள்ளிக்கான பாதை….............3

இடம் : தாந்தோனி மலை ஒன்றியம், கரூர் மாவட்டம்

பள்ளி : ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நரிக்கட்டியூர்

2002ஆம் வருடம் வெறும் ஐந்து மாணவர்கள் மட்டுமே இருக்கும் ஓராசிரியர் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்க விஜயல்லிதா என்னும் ஆசிரியர் செல்கிறார். ஒற்றை ஆளாக வீடு வீடாக நோட்டீஸ் விநியோகித்து பிரச்சாரம் செய்கிறார். உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்கிறார். மைக் செட் கட்டி பள்ளி சேர்க்கை பிரச்சாரம் என தூள் கிளப்புகிறார். அந்த ஆசிரியரின் குரலுக்கும், நம்பிக்கைக்கும் அங்கீகாரம் கிடைக்கிறது. அவரது பிரச்சாரங்களின் மூலம், 23 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அப்பள்ளியில் சேர்க்க முன்வருகின்றனர்.

       விஜயல்லிதா என்னும் அந்த ஆசிரியருக்கு மனதில் நம்பிக்கை ஒளி பிரகாசமாகிறது. ஐந்து இருபத்தி மூன்றாகி, தொடர்ந்த வருடங்களில் 66, 71 என மாணவர் எண்ணிக்கை கூடத்தொடங்குகிறது. கடந்த பத்தாண்டுகளில் அந்த பள்ளியின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 217. வியப்பின் விளிம்பில் நாம் மீளாதிருக்கிறோம். பத்தாண்டுகளில் 43 மடங்கு வளர்ச்சி சாத்தியமானது.

       இன்னும் தொடர்கிறது…… இந்தப் பள்ளிக்கு வரும் 217 மாணவர்களில் 90 மாணவர்கள் ஆட்டோவுக்கு 500 ரூபாய் அதிகபட்சமாக கொடுத்தும் வந்து படிக்கிறார்கள். இப்பள்ளியைச் சுற்றிய பத்து கிலோமிட்டர் சுற்றளவில் இருந்தும் இப்பள்ளிக்கு வருபவர்கள் அவர்கள். அரசுப்பள்ளி என்றாலும் வருடா வருடம் ஆண்டுவிழா. சுமார் ஒரு இலட்சம் வரையிலாவது செலவு செய்து ஆண்டுதோறும் விழாக்கள் நடத்துகிறார்கள். வெறும் அறிவியல் என்றில்லாமல் எல்லா பாடங்களிலும் ஆண்டுதோறும் எல்லா வகுப்புகளுக்கும் கண்காட்சி நட்த்தும் சிறப்பினை பெற்றிருக்கிறார்கள். 2007 ஆம் ஆண்டில் 5 நாள் 5 வகுப்புகளுக்கும் 5X5 கண்காட்சி நட்த்தியிருக்கும் இப்பள்ளிக்கு கண்காட்சி காண பெற்றோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் உள்ள தாந்தோணி மலை ஒன்றியத்தில் உள்ள 100 பள்ளிகளும் 2007 கண்காட்சியை வந்திருந்து பார்த்துவிட்டு பாராட்டி சென்றிருக்கிறார்கள். ஜனவரி 26 குடியரசு தினத்தோடு விளையாட்டு விழாவினையும் இணைத்துவிட்டதால் அதுவும் தடைபடாது நடைபெற்று வருகிறது.

       தொழில்நுட்ப பகாசுர வேகத்தில் ஸ்மார்ட் போன் காலத்தில் நூலகங்களின் தேவை அவ்வப்போது விவாதப் பொருளாக மாறியுள்ள பொழுதில், அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் சுமார் 1000 நூல்கள் வகுப்பு வாரியாக பிரிக்கபட்டுள்ள இயங்கு நிலையில் உள்ள ஒரு நூலகம் இருக்கின்றது என்பது எத்துனை சிறப்பு உங்களுக்கே தெரியுமே… தினமும் மதிய உணவு இடைவேளை நூலகப் பயன்பாட்டிற்காகவும் மாற்றப்பட்டு இருக்கிறது. 3ஆம் 4ஆம் வகுப்பு குழந்தைகள் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நூல்களைப் படித்து வரலாம். வகுப்புக்கு ஒரு கணிணி வீதம் ஐந்து கணிணிகள், அநேகமாக தமிழ்நாட்டிலேயே இணைய வசதி உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி இதுவாகத்தான் இருக்க வேண்டும். தொலைபேசி வசதியும் அவ்வாறே. ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை பாடவேளைகளில் அணைத்து வைத்துவிட்டு, அவசர அழைப்புகளுக்கு இந்தத் தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள். தினமும் மாலை பள்ளி முடிந்த ஒரு மணிநேரமும் மீத்திறன் குறைந்த மாணவர்களுக்கான வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.

       குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அரசு வழங்கும் சீருடையோடு, கொடையாளர்கள் தரும் இன்னொரு சீருடையும் இப்பள்ளியால் வழங்கப்படுகிறது. நோட்டுப் புத்தகங்களும் அவ்வாறே கிடைத்துவிடுகிறது. விஜயலலிதா தலைமை ஆசிரியர் காலம் தொட்டு இதுவரை பள்ளிக்கு சுமார் 25 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை சேர்த்து இருக்கிறார். குழந்தைகளுக்கு வட்ட வடிவிலான மேஜைகள், 64 நாற்காலிகள், 20 மின்விசிறிகள் என அடுக்கும் நேரத்தில், பள்ளிக்கு இன்னும் போதிய கட்டிடங்கள் இல்லாதது மிகப் பெரும் குறையே. பள்ளி விழாக்களுக்கு நாடகம் அமைக்கும் நாடக அரங்கில் ஒரு வகுப்பு நடக்கிறது. ஏழு வகுப்பறைகள் இப்பள்ளிக்கு தேவையாயிருக்க, தற்போது நான்கு வகுப்பறைகளே இரண்டு கட்டிடத்தில் உள்ளது. ஒரு கட்டிடத்தின் பக்கவாட்டில் கலர்சீட் போட்டு ஒரு வகுப்பு நடத்தப்படுகிறது. நல்ல வெயிலிலும், மழையிலும் பெரும் அவஸ்தையே.

வகுப்பறை எப்படி இருக்கிறது என்பது முக்கியமல்ல. வகுப்புக்குள் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே முக்கியம். கல்வியென்பது வகுப்பறையின் தன்மையில் என்பதை நமிப் பெற்றோர் தங்கள் குழந்தைகளை இச்சிறப்பு வாய்ந்த பள்ளிக்கு அனுப்புகின்றனர். எனினும் ஆரோக்கியமான வகுப்பறைகளும், பாதுகாப்பான சூழலும் எத்துனை அவசியமானவை. அரசு கவனிக்குமா? ஒன்றால் வகுப்பில் மட்டும் படிக்கும் 66 பேரில் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து வந்த குழந்தைகள் மட்டும் 25 பேர். ஓராசிரியர் தொடக்கப் பள்ளியாய் இருந்து உண்மையான உழைப்பில் நரிக்கட்டியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, இப்போது வளர்ச்சியின் வேகத்தில் நடுநிலை பள்ளியாகி 7 ஆசிரியர்களுடன் இருக்கிறது.

இன்னமும் 300 குழந்தைகளைக் கூட சேர்த்து படிக்க வைக்கலாம் என்று ஆசைதான். ஆனால் போதுமான இடவசதிதான் இல்லை என்று ஆதங்கப்படுகிறார் விஜயலலிதா{04324-246800}.

இது போன்ற ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுவதும் நிரம்பி வழிய வேண்டும்.


பயணம் தொடரும்............

0 comments:

Post a Comment