Monday, July 14, 2014

பொதுப்பள்ளியின் நாயகன்

தமிழ்நாட்டில் பாகுபாடற்ற பொதுப்பள்ளிக் கல்வி முறை பெருமளவு சீரழிந்துள்ளது. சமச்சீர் கல்வி என்ற பெயரில் உள்ள சமச்சீரான பாடத்திட்டம் கூட கடுமையான இந்திய மாணவர் சங்க போராட்டத்திற்கு பிறகு கொண்டு வரப்பட்டதுதான். அதுவும் கூட பல்வேறு தடைகள் தாண்டி உச்சநீதிமன்றம் சென்றபிறகு அமுல்படுத்தப்பட்டது. சமச்சீர் கல்வி என்ற சொல்லாடல் கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதால் தற்போதைய அரசு அச்சொல்லையே பயன்படுத்தக் கூடாதென கல்வித்துறை அதிகாரிகளுக்கு மறைமுக உத்தரவிட்டுள்ளது

சமச்சீர் கல்வி என்று பேசப்படுகிற பொதுப்பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு ஆண்டுகள் மூன்றாகியும் முன்பிருந்த அரசுப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ இந்திய பள்ளி, ஓரியண்டல் பள்ளி என்ற நால்வகை வாரியங்களையும் இணைந்து ஒரு வாரியமாக மாற்றி அறிவிக்கக்கூட இன்னமும் இயலவில்லை. இதற்காக ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் போடப்பட்ட பிறகுதான்மாற்றும் எண்ணம் உள்ளது; பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் தேவைஎன அரசு கேட்டுள்ளது. பாகுபாடில்லாத அனைவருக்கும் சமமான கல்வி இனி இல்லை. ஏழைக்கு ஒரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி என்பது நீதியாகவே மாறிவிட்டது

எனவே, எப்பாடுபட்டாயினும் நமது பிள்ளைகளை தரமானதாக கூறப்படும் தனியார் பள்ளிகளில் சேர்ப்போம் என்று அவரவர் வருவாய் பிரிவுக்கு தக்க தனியார் பள்ளிகளை நாடத்துவங்கிவிட்டனர். அரசும் தன் பங்கிற்கு நிதி இல்லை என காரணம் கூறி அரசுப்- பள்ளிகளை வலுப்படுத்தாமல் தனியார் பள்ளிகளை ஊக்கப்படுத்தியும் அதன் வழியாக மூலதன சுரண்டலை ஊக்குவித்தும் வருகிறது. இதன் விளைவாக தமிழக தொடக்கக் கல்வி குத்துயிரும் குலையிருமாய் கிடக்கிறது. தொடர்ந்து பள்ளிகள் மூடப்படுவதையும் மூடப்பட இருப்பதையும் மூடப்படும் அபாயத்தில் இருக்கும் பள்ளிகளைப் பற்றியும் நாள்தோறும் செய்திகள் வந்தவண்ணமே இருக்கிறது.

இந்நிலையில் பொதுக்கல்விக்கு வித்திட்ட (இன்றைக்கு அது பெரும் சவாலுக்கு உள்ளாகியிருக்கிற) காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசு பெயரளவிற்கேனும் கொண்டாடுவது மகிழ்ச்சிக்குரியது. அனைவருக்கும் சமமான  தரமான கட்டாய இலவச கல்வி வேண்டுமென போராடும் அனைவரும் இந்த நாளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பொதுப்பள்ளி முறையை மீண்டும் வலுப்படுத்த புதிய சபதங்களையும், மேற்கொள்ளும் நாளாக இந்நாளை கைக் கொள்ள வேண்டும்

தேசத்தின் முன்னேற்றத்திற்கு கல்வி ஆணிவேர் கல்வி பெறும் உரிமையை பரவலாக்க வேண்டும் என்று கனவு கண்டனர், தேசபக்த முன்னோடிகளான பகத்சிங் மகாத்மா காந்தி, கோபாலகிருஷ்ண  கோகலே போன்றோர். இக்கனவை நனவாக்க சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல் கலாம் ஆசாத்தும் சட்டமேதை மாமேதை அம்பேத்கரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டனர். 14வயது உட்பட்ட அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமையை அரசியல் சாசனத்தின் வழியாக கொண்டுவருவதற்கு அன்றே முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் இந்த குழுவிற்கு தலைவராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் நிதி இல்லை என்று காரணம் கூறி அடிப்படை உரிமையில் சேர்க்கப்படவேண்டிய சட்டப்பிரிவை வழிகாட்டும் நெறிமுறையில் கொண்டு சேர்த்து கல்வி உரிமையை முடக்கினார். இன்றுவரை கல்வி உரிமை ஈடேறவில்லை. கல்வி உரிமை சட்டத்திற்கு பிறகும் அது கனவாகவே நீடிக்கிறது

மத்திய அரசின் நிதி இல்லை என்று காரணம் கூறி 14வயதுக்குட்பட்டோரின் கல்விக்கு துரோகம் இழைத்த நிகழ்விற்கு சவால் விடும் வகையில் இரண்டு முக்கிய தலைவர்கள் தாங்கள் முதல்வராக இருந்த மாநிலங்களில் கல்விப் பணிகளை துவக்கினர். ஒருவர் காமராஜர். மற்றொருவர் கேரளாவின் முதல்வராக இருந்த .எம்.எஸ். நம்பூதிரிபாத். காமராஜர் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் ஒரே மாதிரியான பாகுபாடற்ற  பொதுப்பள்ளிகளை (அரசுப் பள்ளிகள்) திறந்தார். 3 கிமீக்கு ஒரு தொடக்கப் பள்ளி, 5 கிமிக்கு ஒரு உயர்நிலைப்பள்ளி, என்ற முடிவை எடுத்தார். அப்பள்ளிகளில் பயில வரும் மாணவர்களின் வருகையை உத்தரவாதம் செய்ய சீருடை, நோட்டுபுத்தகம், மத்திய உணவு என வலுவான பொதுப்பள்ளியை விஸ்தரித்துக் கொண்டே சென்றார். அவருக்கும்நிதி இல்லை கஜானா காலி தனியாரை நாடலாம்என்று அதிகாரிகள் ஆலோசகர்கள் ஆலோசனைகள அள்ளித்தெளித்தனர். இவர்களது ஆலோசனைகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு பள்ளி சீரமைப்பு மாநாடுகளை நடத்தத் துவங்கினார். இம்மாநாடுகளில் தனியாரின் தாரளமான நிதி பொதுப்பள்ளிகளுக்கு கோரினார். அரசுப் பள்ளிகள் வளர்ந்தது. பள்ளிகள் மட்டும் அரசின் முழுக்கட்டுப்பாட்டில் வந்த்து. இன்ரைய  PPP Public Private partnership முன்மாதிரி பள்ளிகள் அன்று கூறி அரசுப் பள்ளிகளை தனியாருகு தாரைவார்ப்பதற்கு மாற்றான முறைகளை அன்றே உருவாக்கி காட்டினார். இந்தப் பள்ளிகளில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வின்றி கல்வி வழங்கப்பட்டது. பாடப்புத்தகம் வழியாகவும் இத்தகைய பள்ளி முறையின் வழியாகவும் மாணவர்கள் பாடம் பயின்றனர்

தமிழகம் இன்று அடைந்துள்ள முன்னேற்றத்தில் ஆரோக்கியமான விஷயங்களில் இந்தக் கல்வி முறைக்கும் அதில் பயின்று வளர்ந்தவர்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அவ்வாறு உருவாக்கப்பட்ட பள்ளிகள் தான். இன்று தொடர்ந்து மூடப்பட்டு வந்திருகின்றன. எங்கள் ஆட்சிதான் உண்மையான காமராசர் ஆட்சி என்று சொல்லிக்கொள்ளுபவர்கள் காமராசர் ஆட்சியை இனிமேல்தான் உருவாக்கப்போகிறோம் என்று சொல்பவர்கள் எல்லோரும் சேர்ந்து அரசுப் பள்ளிகளுக்கு திவசம் செய்துவருகிறார்க்ள். தங்கள் பங்கிற்கு ஆளுக்கொரு தனியார் பள்ளி கட்டிக் கொண்டு இடரற்ற லாபம் ஈட்டியும் வருகிறார்கள் . மெட்ரிக் பள்ளிகள், சிபிஎஸ்சி பள்ளிகள் சர்வதேச பள்ளிகள் என பள்ளிக் கல்வி புற்றீசல் போல் தனியார்மயம் பெருகிக் கொண்டே செல்கிறது

அரசுப் பள்ளிகளில் எவ்வளவு குறைபாடுகள் இருந்தாலும் தனியர் பள்ளிகள் அவற்றில் ஈடுகட்ட முடியாதென்று அதன் உள்ளார்ந்த காரணத்தை வைத்துதான் அமர்த்தியா சென் கூறுகிறார். காமராசர் அரும்பாடுபட்டு உருவாக்கிய பொதுப்பள்ளி முறை பள்ளிக்கல்வி முழுவதும் அரசின் பொறுப்பிலும் பாகுபாடின்றியும் கொடுக்கப்படவேண்டியது இன்றைய தேவை. தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே காமராசர் துவங்கிய பொதுப்பள்ளி ஒரு முன்மாதிரி. பொதுப்பள்ளி என்றால் நம் நினைவுக்கு காமராசர் வருவது போல் அடுத்து நினைவுக்கூரப்படவேண்டியவர் .எம்.எஸ். உலக கம்யூனிச இயக்க வரலாற்றில்  அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் கடமையை இஎம்எஸ்ஸும் கேரளாவில் துவங்கினார். அனைவருக்கும் தரமான சமமான கல்வியை வழங்கும் கேரள கல்வி மாசோதாவை உருவாக்கினார். கல்வி வியாபாரிகள் கொந்தளித்தனர். உச்சநீதிமன்றம் இம்மாசோதா சரியானதென்று தீர்ப்பளித்தது. இருந்தபோதும் இஎம்எஸ்சின் அரசு இந்த கல்வி மசோதாவிற்காகவே கவிழ்க்கப்பட்ட்து. ஒரு ஜனநாயக குடியரசின் அடிப்படை கடமையே அனைவருக்கும் சமமான தரமான இலவசமான கல்வியை வழங்கவேண்டியதே. அதை இத்தனை ஆண்டுகள் போராடியும் பெறமுடியவில்லை. ஆனால் இக்கல்வி அடிப்படை உரிமைக்காக போராடுபவர்களுக்கு காமராசரும், இஎம்எஸ்ஸும் எப்போதும் உயிரோட்டமான உந்துசக்தியாகவே இருப்பார்கள்.

ஜூலை 15 காமராசர் பிறந்த நாள்

2 comments:

venu's pathivukal said...

மிகவும் நுட்பமான செய்திகளை உள்ளடக்கிய ஆழமான பதிவு. காமராசரைக் கொண்டாடும் நேரத்தில், மாற்று தத்துவார்த்த சிந்தனையோடு கல்வியை அணுகிய இ எம் எஸ் குறித்தும் கட்டுரை பேசுவது அருமையானது. சமச்சீர் கல்வி, பொதுப் பள்ளி இரண்டைக் குறித்தும் விவாதங்களையும் உருவாக்கும் உங்கள் பிரதி, கொஞ்சம் காலத்தே எழுதப் பட்டு நாளிதழ் எதிலாவது வந்திருந்தால் எத்தனை அமிர்தமாக இனித்திருக்கும்...நமது செயல்பாட்டாளர்கள் பலருக்கும் இந்த அன்றாட வேலைப் பளு, முன்னுரிமைகளைப் புரியவிடாது திண்டாட வைத்துவிடுகிறது...ஆனாலும், வாழ்த்திக் கொண்டாடுகிறோம் தோழா உங்களது இந்த பிரதியை!


எஸ் வி வேணுகோபாலன்

தேனி சுந்தர் said...

வாழ்த்துகள் தோழர்....
காலத்தே எழுதிய அருமையான கட்டுரை....
தீக்கதிருக்கு அனுப்பினீர்களா?
வலைப்பூ ஆரம்பித்ததைச் சொல்லவேயில்லை...
அத்தனை ரகசியமா?
மிக்க மகிழ்ச்சி...
உங்களது எழுத்துகளை வாசிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்...

Post a Comment