Friday, July 11, 2014

நெஞ்சு பொறுக்குதிலையே!

தீண்டாமையும் அதனையொட்டிய வன்கொடுமையும் எங்கு நடக்கிறது? என நகர்புற நடுத்தர வர்க்கத்தினர் அப்பாவித்தனமாக பேசுவதை பல நேரங்களில் கேட்க முடிகிறது. கிராமங்களில் நிகழும் வன்கொடுமைக் கொடூரங்கள் ஒரு புறம் இருக்கட்டும். அரசு ஊழியர்கள் பலர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைதுசெய்யப்பட்டு, சிறைக்குப் போனதையும் வேலை இழந்ததையும் செய்தித்தாள்களில் படிக்கிறோம். மின்னலை ஊடகங்களில் பரப்பான செய்திகளாகப் பார்க்கிறோம். இவ்வாறு கைது செய்யப்படுபவர்களில் பெரும்பகுதியினர் தாழ்த்தப்பட்ட மக்களே என்பது எத்தனை பேருக்குத் தெரியும். மற்ற சாதியினர் லஞ்சமே வாங்கவில்லையா? லஞ்சம் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் போது தலித்துகள் மட்டுமே சிக்க வைக்கப்படும் மர்மம் என்னதீண்டாமை வன்கொடுமைதானே!. எல்லாரும் லஞ்சம் வாங்கலாம். தலித்துகள் வாங்ககூடாது என்பது எவ்வளவு பெரிய வன்கொடுமை? இதுபற்றி யாரேனும் எங்கேனும் வாய் திறந்து இருக்கிறார்களா? இந்தத் தகவல் உண்மையா? பொய்யா? என அறிய விரும்புவர்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பி தெரிந்து கொள்ளலாம்.

லஞ்சம் வாங்காத அரசு ஊழியர்கள், மேற்பார்வையாளர்கள் அனைவரும் இவர்கள் பார்வையில் “லொள்ளு பிடித்தவர்கள்”, “சட்டம் பேசுபவர்கள்”. தவறைத் தட்டிக் கேட்பது, நியாயத்தை எடுத்துக் கூறுவது கூட தலித்துகளாக இருக்க்க்கூடாது என நினைக்கின்றனர். நியாயத்தைக் கேட்பவர்கள் “லொள்ளுப் பிடித்தவர்” என முத்திரை குத்துவதும் இதன் விளைவாக பலர் தலித் மக்களை சேர்ப்பதில்லை. இது வன்கொடுமைதானே. என்ன சார் எல்லாவற்றிற்கும் வன்கொடுமை சாயம் பூசுகிறீர்களா எனக் கேட்பவர்களுக்கும் நியாயத்தைத் தட்டுக்கேட்கும் அனைவருக்கும் இது பொருந்தும் என வாதிடுபவர்களும் சற்று மனசாட்சியைத் தொட்டு யோசித்துப் பார்த்தால் உண்மை உரைக்கலாம். மேலதிகாரிகளுக்கு எதிர்த்துப் பேசினால் பிடிக்காது. தலித் ஊழியர் எதிர்த்துப் பேசினால் கட்டுக்கடங்கா கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. உற்று நோக்குங்கள். இது தீண்டாமையின் வன்கொடுமையான வடிவம்தானே.

சாதாரண அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த சட்ட வரன் முறைக்கும்  வராத தீண்டாமை வன்கொடுமைகளால் அவதிப்படுவதைப் விடுங்கள். மாவட்ட ஆட்சியராகவெல்லாம் கோலோச்சிவிட்டு, மூத்த IAS அதிகாரியாக சென்னைக்கு செல்லும் தலித் உயர் அதிகாரிகள் எத்தனை பேர் வீடு கிடைக்காமல் அவதிப்பட்டனர் என்ற கதை எத்தனை பேருக்குத் தெரியும்? பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்தவர் தனது பணிக்காலத்தில் ஒரே ஒரு தலித் மாணவருக்கு கூட முனைவர் பட்ட நெறியாளராக இருந்தது இல்லை. ”நான் பெரும் சாதிப் பற்றாளன் என்பது அனைவருக்கும் தெரியும்” எனச் சொல்லிச் சிரிக்கிறார் மற்றொரு பேராசிரியர். ஒரு மாணவனைக் கண்டவுடன் “என்ன சாதி?” எனக் கேட்ட்தில் அவரது பணிக்காலத்தில் எத்தனையோ ஆயிரம் மாணவர்களை நோகடித்தார் இன்னொரு பேராசிரியர். படித்த, பணியிலிருக்கும் தலித் மக்கள் பலர் தங்கள் சொந்தக் கிராமத்திலேயே வாழ நேர்தவர்கள் சகலவித தீண்டாமைக் கொடுமைக்கும் உள்ளாவதும், நாள்தோறும் அனுபவிக்கும் கொடூரமும், தீண்டாமையை இயல்பாக ஏற்றுக் கொள்ளவேண்டிய வக்கிரம் இவையெல்லாம் வன்கொடுமையன்றி வேறேன்ன?

தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டம் மேற்படி வன்கொடுமைகளைப் பற்றி பேசவில்லை. இதுபோன்ற வன்கொடுமைகளை சட்டத்தின் முன்  நிறுத்துவதும் கடுமையான பணி. தற்போது சவாலுக்கு உள்ளாகியிருப்பது “தீண்டாமை வன்கொடுமை சட்டம் 1989” உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வழக்கை முன்வைத்து இத்தொடர் பயணிக்க இருக்கிறது, இந்த வலைப்பூ பதிவு. நான் அறிந்த தீண்டாமை வன்கொடுமையின் வகைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். பல தொலைக்காட்சி ஊடகங்களில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக விவாதங்களில் கலந்துகொள்ளும் பாலு என்ற வழக்கறிஞர் தான் இவ்வழக்கைத் தொடர்ந்து இருக்கிறார். காட்சிக்கு எளியனாய், கடும் சொற்களை உதிர்க்காதவராய விவாதங்களை எடுத்துவைக்கும் பாலு இவ்வழக்கைத் தொடர்ந்து இருக்கிறார்.

பெண்ணடிமைத்தனம், சாதியீயம் யாரிடம் எவ்வளவு மண்றாடிக்கிடக்கிறது என்பது யாருக்குத் தெரியும். எத்தனை உயிர்கள் எவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டு இருந்தாலும் காரின் குறுக்கே ஓடிய பூனைக் குட்டியாகத் தானே மோடி கண்ணுக்குத் தெரிந்தது. சாதியம், தீண்டாமை விசயங்களில் பாலுவும் அப்படி இருக்கலாம்.


        நாம் எப்படி இருக்க முடியும் ?

0 comments:

Post a Comment