Saturday, August 27, 2016

வி.ஐ.டி வேந்தரின் புதிய கல்வி கொள்கை குறித்த பேட்டி அகமும் புறமும்

26.08.2016 அன்று தமிழ் தி இந்துவில் வெளியான வி.ஐ.டி வேந்தர் விஸ்வநாதன் அவர்களின் பேட்டிக்கான பதில் இதோ :::
”முடிவை மாணவர்கள் வசம் விட்டுவிடுங்கள்” என்று வி.ஐ.டி. வேந்தர் ஜீ.விஸ்வநாதன் தனது தி இந்து நேர்காணலில் (26.08.2016) முத்தாய்ப்பாகக் கூறிமுடிக்கிறார். அறுபதுகளில், எழுபதுகளில் ஏன் எண்பதுகளில் இக்கருத்தைக் கூறியிருந்தால் சாலப்பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் பள்ளி முதல் பல்கலைக்கழகங்கள் வரை அரசின் ஏற்பாட்டிலும் அனைத்துப் பிரிவு மாணவர்களும் ஒரே வகைப் பள்ளி கல்லூரிகளில் படித்த காலம். இன்று கீழிருந்து மேல் கல்வி பல கூறுகளாக பிளவுபட்டு கிடக்கிறது. கட்டணக் கல்லூரி மாணவர்கள் கல்லூரியையோ அரசையோ தட்டிக் கேட்டால், செலுத்திய கட்டணம் தண்டமாகி விடுமோ வாழ்வு பாழ்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகிறார்கள். ஏழைக் கல்லூரி மாணவர்களோ கல்லூரி நேரம் போக, மீதி நேரம் தங்கள் ஜீவிதத்திற்கான பொருளீட்டல் பணியில் ஈடுபடுகிறார்கள். அவர்களது வறுமை அவர்களை அவர்களுக்கு வெளியே வர அனுமதிக்கவில்லை. இச்சூழல்நிலையில், சக மாணவன் கோகுல் ராஜ் கொலை செய்யப்பட்டு இரயில் பாதையில் வீசப்பட்டாலும், சங்கர் நடுரோட்டில் விரட்டி விரட்டி, குத்திக் கொல்லப்பட்டாலும் அமைதியே திருவுருவாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. அதே போல் எந்தவொரு அரசியல் பிரச்சனைகளுக்காகவும், கொள்கைப் பிரச்சனைக்காகவும் கல்லூரி பள்ளி மாணவர்கள் எதிர்வினையற்ற இயலாமல் உள்ளனர். இந்தச் சூழலை நன்கு புரிந்துகொண்ட ஜி.விஸ்வநாதன் மிகவும் திறமையாக நடுநிலையோடு பேசுவது போல் மாணவர்கள் வசம் விட்டுவிடுங்கள் என்கிறார். அவர் கூறுவது போல் மாணவன் வசம் விட்டுவிட்டால், இந்தக் கல்வி கொள்கையை இன்றுள்ள வடிவத்திலேயே அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். எதிர்கேள்வி இருக்காது என நினைக்கிறார்.

“கல்வி” மாநிலப்பட்டியலிருந்து பொதுப்பட்டியலுக்கு மாறியதை சரியென வாதிடும் ஒரே கல்வியாளர்(?) ஜி.விஸ்வநாதன். ஒரு மாநிலத்தின் சமூக, பொருளாதார, மொழி தனித்துவத்தை கருத்தில் கொண்டு மாநிலங்கள் தனக்கான பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொள்ள உரிமை வேண்டுமென்றால் ஜீ.வியோ அதனை பணத்தின் அடிப்படையில் பார்க்கிறார். மாநிலத்தில் அதிகாரம் இருந்தென்ன பணம் வேண்டுமே. அதற்கு பொதுப்பட்டியலில் கல்வி நீடிக்க வேண்டும் என்கிறார். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிக் கொடு என்றால் அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் சேர்த்தே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் அல்லது இரண்டையும் போராடிப் பெற வேண்டும்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி 14 கோடி பேர் உயர்கல்வி படிக்க தகுதியானவர்கள். ஆனால் இவர்களில் 3 கோடி பேர் மட்டுமே உயர்கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலை மாற முன்மொழிவுகள் உள்ளன என்கிறார் ஜீ.வி. தமிழ்நாட்டில் இன்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. ஏன் மாணவர்கள் படிக்க வரவில்லை. தற்போது பொறியியல் படிப்புகளுக்கு கிராக்கியில்லை என்பது மட்டுமல்ல. அவ்வளவு பணத்தை செலவழித்து படிக்க விருப்பமில்லை என்பதும் முக்கியக் காரணம். மாணவர்கள் கற்க தயாராக உள்ளனர். பெற்றோர் அனுப்பவும் தயார். ஆனால் பணம் இல்லை. வசதியில்லை. இதனால் தான் கோடான கோடி மாணவர்கள் உயர்கல்வி கனவு தகர்ந்து போகிறது. இந்தக் கனவு நிறைவேற என்ன செய்ய வேண்டும்? அரசு தான் கல்லூரிகளை தொடங்க வேண்டும். இனி துவங்கும் கல்லூரிகளை தனியார் மூலதனத்தோடும் அந்நிய நேரடி மூலத்தனத்தோடும் தொடங்கப்படும். அரசு முதலீடு இல்லை என்கிறது புதிய கல்விக் கொள்கை முன்மொழிவு. இதைத்தான் ஜீ.வி மனமுவந்து வரவேற்கிறார். தம் போன்ற கல்வித் தந்தைகளுக்கு நல்ல வியாபாரம் காத்திருக்கிறது என்பதையே, அதுபோலவே அவர் கூறும் மருத்துவக் கல்லூரிகளில் தேவை மற்றும் எண்ணிக்கை அதிகரிப்பு, நமக்கு மருத்துவக் கல்லூரிகள் வேண்டும். உயிர் காக்கும் மருத்துவர்கள் இன்னும் நிறைய வேண்டும். ஆனால் தனியார் துறை மருத்துவக் கல்லூரிகள் வேண்டாம். உயிரோடு விளையாட பச்சமுத்துகளை அனுமதிக்க முடியாது. ஜீ.வியோ அது வேண்டும் என்பதற்கு புதிய கல்விக் கொள்கை தேவை என்கிறார்.

பல்கலைக்கழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளாக இருக்கும் போதே நம் தனியார் கல்வி நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ரெகுலர், இர்ரெகுலர் என்று இருவிதமாக மாணவர்களை சேர்ப்பது. இர்ரெகுலர் என்றால் கல்லூரிக்கே வராமல் பரீட்சை மட்டும் எழுதிக் கொள்ளலாம். வருகைப் பதிவேடு வழங்கல், அகமதிப்பீட்டு தேர்வுகள், ஒப்படைப்புகளிலிருந்து விதிவிலக்கு. இதெற்கென தனிக் கட்டணம். ஆனால் எந்த ஆய்வின் மூலமும் இந்த மோசடிகளை கண்டுபிடிக்க முடியாது. தன்னாட்சி கல்லூரிகளில் தரம் பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. எந்த விதத்திலும் தன்னாட்சிக் கல்லூரிகள் கல்வித்தர உயர்விற்கு பங்களிக்கவில்லை. வெறும் தேர்வு விகிதாச்சாரம் காகித  கணக்குகளைத் தாண்டிய சாதனைகள் அங்கு இல்லை. இது ஜீ.விக்கும் நன்கு தெரியும். இருந்தும் இன்னும் தன்னாட்சி கல்லூரிகள் வேண்டும் என்றார். என்ன சொல்ல? இதற்காகத் தான் அவர் புதிய கல்விக் கொள்கை முன்மொழிவுகளை ஆதரிக்கிறார். தனியார் தன்னாட்சிக் கல்லூரிகளின் இலட்சனம் இதுவெனில் தனியார் பல்கலைக்கழகங்கள் எப்படி இருக்கும் நினைத்துப் பாருங்கள். இத்தகைய தனியார் பல்கலைக்கழகங்கள் பெருக வேண்டுமாம். அதற்கு இக்கல்விக் கொள்கை பரிந்துரைகள் அமலுக்கு வரவேண்டும் என்கிறார். இதையெல்லாம் மாணவர்கள் விரும்புவார்கள் என்று ஒருவேளை மாணவர்களிடம் விட்டுவிடலாம் என்கிறாரோ தெரியவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகரித்தால் கட்டணம் அதிகரித்து கல்வி வியாபாரமாகிவிடாதா என்பது கேள்வி? அதற்கு ஜீ.வி. அரசுக்கும் தனியாருக்கும் போட்டியிருக்க வேண்டும் என்று முடிக்கிறார். எப்படி என்று நேர்காணல் செய்தவரும் கேட்கவில்லை. ஜீ.வியும் விளக்கிக் கூறவில்லை. அரசுக் கல்வி நிறுவனங்கள் கட்டணம் அதிகரிக்க வேண்டும். இரண்டுக்கும் நூலிழை இடைவெளியே இருக்க வேண்டும் என்று கருதுகிறார் என்றே பொருள் கொள்ள வேண்டும். நன்கொடை என்ற பெயரில் கட்டுக்கட்டாக பணம் வசூலிப்பது வரை மூடி மறைக்கிறார். கட்டணம் குறைவு என்றால் தனியார் கல்வி நிறுவனங்கள் தனது வரவு செலவு கணக்குகளை வெளிப்படையாக மாணவருக்கும் பெற்றோருக்கும் காட்டத் தயாரா? அதனையே அரசுக்கும் காட்டி கட்டணங்களை கட்டும்படிக் கோரலாமே? அதை விடுத்து தனியார் கட்டணக் கொள்கைக்கும் மோசடிக்கும் வக்காலத்து வாங்குவது ஏன்?

தனியார் கல்லூரிகளின் சாதனைகள் என்ன என்ற கேள்விக்கு, தனியார் இல்லையென்றால் ஐடி.தொழில் துறையே இல்லை என்கிறார். முதலில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு இந்தியாவில் 14 கோடி பேர் கல்லூரிக் கல்விப் பெறத் தகுதிவாய்ந்தவர்கள். 3 கோடி பேர் மட்டுமே தற்போது படிக்கின்றனர். இக்கொள்கை மீதமுள்ளவர்கள் படிக்க வழிவகுக்கும் என்கிறார். இந்தக் கேள்விக்கோ தமிழ்நாட்டில் 550க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால், 300-350 போதும் என்கிறார். இருக்கிற கல்லூரிகள் இன்றே தேவையில்லை என்னும் போது, முந்தைய கேள்விக்கான விடை உண்மையானதா? போலியானதா? மேலும் ஐ.டி.தொழிலுக்கு ஆட்களை சப்ளை செய்ததைத் தவிர வேறு சாதனைகளை அவரால் பட்டியலிட முடியவில்லை. ஐ.டி.தொழில் உருப்பெற்று விரிவடைந்தபோது போதுமான அரசுக் கல்லூரிகள் இல்லை. தனியார் கட்டணக் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. அன்று இருந்த மௌசுக்குத் தக்கவாறு இந்தக் கல்லூரிகள் பணம் வசூலித்தனர். பணம் செலுத்த இயலாதவர்கள் அதில் படிக்க இயலவில்லை. ஆக வசதிபடைத்த, நடுத்தர மக்களே தனியார் கல்லூரிகளை பயன்படுத்த முடிந்தது. அவர்களே ஐடி தொழிலுக்கு வந்தனர். இது ஏழை பணக்கார பிரிவை மேலும் விரித்தது. தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசு மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழாவில் பேசிய அம்மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர், “நீங்கள் எல்லாம் 198 முதல் 200 மதிப்பெண் பெற்று இந்தக் கல்லூரிக்கு வந்திருக்கிறீர்கள் உள்ளபடியே மருத்துவம் படிக்க இவ்வளவு மதிப்பெண் தேவையில்லை” என்றார். இதுவே நிதர்சனம்.

எந்த மாநிலத்தில் இருந்து ஐஐடி தேர்வு எழுதி வந்தாலும், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்து வந்தாலும் அதை வைத்து மேற்படி நுழைவுத் தேர்வில் அவர்கள் தேர்ச்சி பெறுவதில்லை. மாறாக, ஆறாம் வகுப்பிலிருந்து காலையில் அந்தந்த மாநில பாடத்திட்டம் அல்லது சிபிஎஸ்சி பாடத்திட்டம். மதியம் முதல் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி. பயிற்சி. இந்தப் பயிற்சி மூலமே தேர்வாகிறார்கள். இத்தகைய பயிற்சி தேவையா? தேர்வு தேவையா? என்பதே அடிப்படைக் கேள்வி. இதுபற்றி சிந்திக்க விடாமல் மக்களை மழுங்கடித்து, தனியார் பயிற்சி மையங்களை நோக்கி தள்ளுதல் முறையா?

TSR சுப்ரமணியம் தனது அறிக்கை முழுமையாக வெளியிடப்படவில்லை என்கிறார். அரசு தற்போது தொகுத்து அளித்திருக்கும் உள்ளீடே பல்வேறு கல்வி ஆவணங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டது என்ற செய்தி ஆதாரங்களுடன் வெளிவருகிறது. இந்நிலையில் விமர்சகர்கள் சரியாக அறிக்கையைப் படிக்கவில்லையென்கிறார்.


இறுதியாக, ஒரு பெரிய கல்வி நிறுவனம் நடத்துபவர் கல்வித் தந்தை, பெரிய கல்வி நிறுவனம் நடத்துபவர் கல்வியாளர் என்று அழைக்கப்படுதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கல்வியாளர் என்ற சொல்லுக்கு ஆழமான பொருள் இருக்கிறது. கல்வி தொடர்பாக எழுதியும் பேசியும் வருபவர்கூட கல்வியாளர் என்ற வரையறைக்கு வர முடியாது. அப்படியிருக்க ஜீ.வி தன்னைத்தானே கல்வியாளர் என்று அழைத்துக் கொள்வது நம்மைச் சங்கடத்தில் ஆழ்த்துகிறது. 

0 comments:

Post a Comment