Tuesday, August 26, 2014

மீண்டெழும் அரசுப் பள்ளிகள்

தான் பெற்ற பரிசினை மாணவி பள்ளிக்குக் கொடுத்த நிகழ்வும், அப்பள்ளியும்


கலையரசி தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். 2013 ஆண்டில் குழந்தை விஞ்ஞானியாக வாரனாசி தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கு கொண்டார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படிக்கும் போதுதான் மேற்படி மாநாட்டில் பங்குபெற்று சிறப்பிடம் பெற்றார். அவர் பள்ளிக்குத் திரும்பியதும் பெரும் பாராட்டுவிழா நடைப்பெற்றது. அந்த மாணவிக்கு பாராட்டு மட்டுமல்ல பணமாகவும் வெகுமதி குவிந்தது. ஏழை மாணவிதான் என்றாலும் தனக்குக் கிடைத்த நிதியுதவி முழுவதையும் அதே மேடையில் பள்ளி வளர்ச்சி நிதியாக வழங்கினார். இத்தகைய பண்பாட்டுடன் சேர்ந்து, குறுகிய காலத்தில் வேகமாக வளர்ந்து வருகிறது இப்பள்ளி. 2010 ஆம் ஆண்டில் 113 பேர் என்ற அளவில் இருந்த இப்பள்ளி இன்று 142 பேராக அதிகரித்துள்ளது. இந்தப் பள்ளியிருக்கும் பகுதியில் ஐந்து வயதைத் தாண்டிய பள்ளி வயதுக் குழந்தைகள் 21 மட்டுமே. ஆனால் ஒன்றாம் வகுப்பில் 25 பேர் சேர்ந்துள்ளனர். இந்தப் பள்ளியின் செயல்பாட்டைக் கண்ணுற்ற மக்கள் தனியார் பள்ளிகளில் இருந்தும் கூட குழந்தைகளை இங்கு கொண்டுவந்து சேர்க்கத் துவங்கிவிட்டனர். தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மட்டும் பத்துக்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்துள்ளனர்.

இந்தாண்டு பள்ளி நடத்திய சுதந்திர விழாவில் கூட நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பள்ளியின் செயல்பாடுகள் அதிகரித்த பின்னர் கிராமக் கல்விக்குழு, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டங்களுக்கு குறைவில்லை. நாற்பது பேருக்கு குறையாமல் கலந்து கொள்கிறார்கள். பள்ளி சேர்ப்பு இயக்க பிரச்சாரம் விடுமுறை நாட்களிலும் கூட வீச்சுடன் நடைபெறும். அறிவியல் பாடத்தை கற்பிப்பதில், பாடத்தை புரிய வைப்பதில் தமிழ்நாட்டிற்கு ஒரு முன்மாதிப் பள்ளி என்று கூட இப்பள்ளியைக் கூறலாம் என்று தோன்றுகிறது. ஆம், மாதம் ஒரு தலைப்பின் கீழ் ஆறு வகையான போட்டிகிஅளை இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் நடத்துகிறார். உதாரணமாக, காந்தவியல் என்றால் அதிலும் குறிப்பாக் ஒரு  உபதலைப்பையே உட்துறையே எடுத்துக் கொள்கிறார். அத்தலைப்பில் ஆறு வகையான போட்டிகளை நடத்துகிறார் அந்த அறிவியல் ஆசிரியர் அன்பழகன். அதே தலைப்பில் கட்டுரை பேச்சு, கண்காட்சி என ஆறு வகையான போட்டிகள நடத்துகிறார். ஒரு வகையான போட்டி அல்லது பங்கேற்பு அல்லது பார்வையிடல் வழியாக புரியாத விஷயம், ஏதோ ஒரு நிகழ்வு வழியாக மனதிற்கு சென்று சேர்ந்துதானே ஆகவேண்டும் எனவும் கேட்கிறார். நியாயம், நியாயம் என்பதைத் தவிர வேறு எதை சொல்ல. அந்த ஒன்றியத்தில் இருக்கும் அருகமைப் பள்ளிகளையும் இணைத்தே இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

அழகான சான்றிதழ், நினைவுப் பரிசு அதற்கென கொடையாளர் என அந்த நிகழ்வு தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது. சர்வதேச தரம் வாய்ந்த பள்ளி என்று கூறும் பள்ளி மாணவர்களைக் காட்டிலும் இந்த மாணவர்கள் அறிவியல் கற்றலில் ஆற்றல் மிக்கவர்களாக மாறிவிடுகிறார்கள். தொடர்ச்சியாக வழங்கப்படும் இவ்வகை பயிற்சி “ எந்த விசயத்தையும் பேசுவான் பையன்என்ற நம்பிக்கையை பெற்றோர்களுக்கு ஊட்டியுள்ளது. இணைய தள வசதி பெற்றுள்ள இப்பள்ளியில் 5 கணிணிகள் உள்ளது. இந்த இணைய தள வசதி மூலம், இந்த்ப் பள்ளி ஆசிரியர்கள் இதர பகுதி குழந்தைகளோடு பேச முடிகிறது பாடம் நடத்த முடிகிறது. இத்தகைய செயல்பாட்டுக்கு மாதம் ரூ. 900 செலவாகிறது. இதற்கும் ஓர் ஆண்டு முழுமைக்கான ஸ்பான்சாராக ஒரு தொண்டு நிறுவனத்தைப் பிடித்து வைத்துள்ளது இப்பள்ளி. தினமும் மாலை மூன்று மணிக்கு எளிய சத்தான சினாக்சுக்கும் ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளாது. ஆங்கில மொழி அபிவிருத்திக்கு பள்ளியிலேயே ஒரு கையேடு தயாரித்து வழங்கியுள்ளனர். குழந்தைகளிடம் உணவு இடைவேளை உட்பட இடைவேளை நேரங்களில் ஆங்கில ஆசிரியர் பேச்சு மொழிப் பயிற்சி அளிக்கிறார். 207 ஆம் ஆண்டுதான் இப்ப்பள்ளி நடுநிலை பள்ளியாக தகுதி உயர்வு கண்டது. 2010 முதல் முன்னேற்றத்திற்கான திட்டமிட்ட முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியத்தில் ஆசிரியர் பயிற்றுனராகப் பணியாற்றிய ஒருவர் தனது மகனை தனியார் பள்ளியில் இருந்து ஒன்றாம் வகுப்பில் சேர்த்துள்ளார் என்பதே இங்கு நடக்கும் முயற்சிகளுக்கு பெறுவெற்றி எனலாம். 2010 ஆம் ஆண்டில் தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் இப்பள்ளிக்கு மாறுதல் அடைந்தோ பணி உயர்விலே வந்துசேர்ந்த பொழுது, ஒவ்வொரு நாளும் காலையில் பள்ளிக்கு வந்தவுடன் அவர்கள் செய்ய வேண்டிய முதல் பணியாக, பிராந்திப்பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், மிச்ச மீதியிருக்கும் ஊறுகாய் பொட்டலங்களை அகற்றுவதுதான். இப்பள்ளி ஆசிரியர்களின் செயல்பாடு, அக்கறை, ஆத்மார்த்த உழைப்பு, அந்த நபர்களை தாங்களாகவே பள்ளிக்கு அருகே வந்து குடிக்கும் பழக்கத்தை தவிர்க்கச் செய்திருக்கிறது. இந்தப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லை. எனவே 2010ல் இருந்து 2014 வரை 150 மரக்கன்றுகள் நட்டும் பெரும்பாலானவை துளிர்த்து வளரமுடியவில்லை. இருந்தும் சலிக்காமல் மீண்டும் நட்ட குழியில் மரத்தை நடுகிறார்கள். இருந்தபோதும், மது அருந்துவோர் மனசாட்சி உந்தித்தள்ள வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்ததுபோல் மரக்கன்றுகளும் காக்கப்படும் நாள் வரும் என நம்பிக்கையில் இருக்கிறார்கள். இன்னும் நவீன அறிவியல் தொழில்நுட்ப வசதிகள் பெருக வேண்டும். 21ஆம் நூற்றாண்டு அவர்களை சவால்களை சந்திக்கவல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும் என இப்பள்ளி ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.


     அறிவியல் ஆசிரியர் அன்பழகன் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்க நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டுமானால், மந்திரமா தந்திரமா சேதுராமனுக்கு தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு வழிகாட்டி ஆசிரியராக இருந்தவர். அறிவியல் இயக்கத்திற்கு மிகச்சிறந்த கருத்தாளர் கிடைக்க காரணமாக இருந்தவர். தற்போதைய மாபெரும் சிறப்பு ஒன்றும் இவருக்கு இருக்கிறது. சமீபத்தில் ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 45 நாள் தொடக்கப் பள்ளிகளில் கணிதம் அறிவியல் கற்பிப்படதில் முறைகளை மேம்படுத்துதல்என்ற பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றுவந்தவர். இந்தியாவில் இருந்து தேர்வு பெற்றவர் இவர் ஒருவரே. இது பற்றிய விரிவான அறிக்கையினை அரசுக்கு சமர்பித்துள்ளார்.

0 comments:

Post a Comment